

கிரிக்கெட்டை இங்கிலாந்தின் லார்ட்ஸில் இருந்து கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸுக்குக் கொண்டுவந்தவர் என்று ஜக்மோகன் டால்மியாவைக் குறிப்பிடுவார்கள். ஒருவரால் வாழ்க்கை முழுக்க விஸ்வரூபம் எடுக்கமுடியுமா என்று வியக்கும் அளவுக்கு வாழ்ந்தவர் அவர்.
ஒரு விக்கெட் கீப்பராக கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார் டால்மியா. ஆனால், 19-வது வயதின்போது தந்தையை இழந்ததால், தன் தந்தை ஆரம்பித்த டால்மியா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார.
1979ல், பெங்கால் கிரிக்கெட் வாரியத்துக்குள் நுழைந்தார். 1983-ல் பிசிசிஐயின் பொருளாளர் ஆனார். டால்மியாவும் ஐ.எஸ். பிந்த்ராவும் 1987 உலகக்கோப்பைப் போட்டி, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குக் கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தார்கள். டால்மியாவின் முதல் சாதனை இது.
1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதால் அதனால் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணியது இந்திய கிரிக்கெட் வாரியம். பிந்திராவுடன் இணைந்து 1987 உலகக்கோப்பை இந்தியாவில் நடத்திக்காட்ட பம்பரமாகச் சுழன்றார் டால்மியா. ஆசிய நாடுகளை ஒருங்கிணைத்தார். இங்கிலாந்துக்குப் பதிலாக இந்தியாவில் போட்டி நடக்கவேண்டும் என்று 1983-ன் இறுதியில் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்தார் டால்மியா. முதலில் இந்த யோசனையை ஐசிசி நிராகரித்தது. ஆனால், தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார் டால்மியா.
இங்கிலாந்து ஆஸ்திரேலியாவின் உதவியை நாடியது. ஆனால் 1987 உலகக்கோப்பை இந்தியாவுக்குக் கிடைத்தால் 1992 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று கொக்கி வைத்தார் டால்மியா. இதை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டது. அடுத்ததாக அசோசியேட் நாடுகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் சொன்னார். இதன்பிறகு யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. 1987 உலகக்கோப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டது. 1987 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் மும்பையில் நடப்பதாக இருந்தது. ஆனால் லட்சம் பேர் அமரக்கூடிய ஈடன் கார்டன்ஸில்தான் இறுதிப் போட்டி நடக்கவேண்டும் என்று திட்டத்தை மாற்றியவர் டால்மியா (மும்பைக்கும் லாகூருக்கும் அரையிறுதி ஒதுக்கப்பட்டது).
கொட்டிய பணம்
அப்போது சொன்னபடி 1992 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவிலும் 1996ல் இங்கிலாந்திலும் நடப்பதாக இருந்தது. ஆனால் 1996 உலகக்கோப்பையையும் இந்தியா நடத்த ஆசைப்பட்டது. ஓட்டெடுப்பு சாதகமாக அமைய அசோசியேட் அணிகளுக்குத் தூது அனுப்பினார் டால்மியா. கூடுதலான தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என்று மீண்டும் தூண்டில் போடப்பட்டது. கடைசியில் எல்லாமே சாதகமாக அமைந்து, இன்னொருமுறை உலகக்கோப்பையை நடத்தியது இந்தியா (பாகிஸ்தான், இலங்கையுடன் இணைந்து).
1993-ல் பிசிசிஐயின் செயலாளர் ஆனார் டால்மியா. அப்போது பிசிசிஐக்கு 85 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. 1987 உலகக்கோப்பையினால் ரூ. 7 லட்சம் கடன் ஏற்பட்டது. கிரிக்கெட்டில் பணம் தாராளமாகப் புழங்கினாலும் தொலைக்காட்சி உரிமத்தால் எந்த லாபமும் ஏற்படவில்லை. அப்போது இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும். இன்றுபோல தொலைக்காட்சி உரிமத்தால் பல கோடிகள் கிடைக்கும் நிலைமை அன்று இல்லை. மேட்ச் ஒளிபரப்பாகிறதே என்று சந்தோஷப்படுங்கள் என்றுதான் தூர்தர்ஷன் தரப்பில் சொல்லப்படும். கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பவேண்டுமென்றால் பிசிசிஐ ரூ. 5 லட்சம் தரவேண்டும் என்று தூர்தர்ஷன் சொன்னது. அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கிரிக்கெட் போட்டியின் தயாரிப்பாளர் பிசிசிஐதான் என்று 1995-ல் தீர்ப்பு வந்தபிறகு பெரிய திருப்பம் உருவானது.
1996 உலகக்கோப்பையில் பணம் விளையாடியது. $10 மில்லியன் டாலருக்கு தொலைக்காட்சி உரிமம் விற்கப்பட்டது. $3.8 மில்லியன் அளித்து பெப்சி போட்டியின் அதிகாரபூர்வ குளிர்பான உரிமையை வாங்கியது. போட்டியின் பெயருக்கான உரிமத்தை வில்ஸ் பெற்றது, $ 13 மில்லியன் அளித்து. இதிலிருந்துதான் டால்மியாவின் பலத்தை பலரும் அறிய ஆரம்பித்தார்கள். இதைத் தொடர்ந்து 1997ல் ஐசிசியின் சேர்மன் ஆனார் டால்மியா.
கிரிக்கெட்டில் நீடித்து வந்த மேற்குலக ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தியதாக புகழப்பட்டார். ஒளிபரப்பு உரிமம், விளம்பரக் கட்டணம் மூலமாக எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்குப் பணம் சம்பாதிக்கமுடியும் என்பதை பிசிசிஐக்கு மட்டுமல்ல, ஐசிசிக்கும் கற்றுத் தந்தார். டால்மியா ஐசிசி தலைவர் ஆனபிறகுதான் உலகக்கோப்பை போட்டிக்கு ஐசிசி உலகக்கோப்பை என்கிற பொதுப்பெயர் வந்தது.
ஜான் ரைட் பாராட்டு
2001ல் பிசிசிஐயின் தலைவர் ஆனார் டால்மியா. அப்போதுதான் இந்திய அணி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மெல்ல மேலே வர ஆரம்பித்த நேரம். இந்திய அணியின் பயிற்சியாளராக ஜான் ரைட் இருந்தார். டால்மியா பிசிசிஐ தலைவர் ஆனதும் ஜான் ரைட்டிடம் ஆலோசனைகள் கோரப்பட்டன. நாங்கள் நிறைய சம்பளம் தரத் தயார். அதற்கேற்ற முடிவுகள் வரவேண்டும் என்கிற நிலைமையை உருவாக்கினார் டால்மியா. இந்திய அணியின் முன்னேற்றத்துக்கு ஜான் ரைட் கூறிய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டார். ஃபிட்னஸ் டிரெயினர் வேண்டும் என்றார் ஜான் ரைட். உடனே சம்மதம் சொன்னார் டால்மியா.
‘டால்மியா பிசிசிஐ தலைவர் ஆனபோது என் கதை முடிந்தது என்று நினைத்தேன். புதிய தலைவர் புதிய பயிற்சியாளரிடம் பணிபுரிய விரும்புவார் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. என்னை நீக்குவதற்குப் பதிலாக ஆலோசகராகப் பார்த்தார். கிரிக்கெட் தொடர்பாக என்னிடம் நன்றாக பேசினார். என் ஆலோசனைகளுக்கு மதிப்பு கொடுத்தார். கேட்டதை செய்து கொடுத்தார்’ என்று டால்மியாவைப் புகழ்கிறார் ஜான் ரைட்.
பிசிசிஐ தலைவர் ஆனபிறகு நிறைய புதிய நடைமுறைகளை உருவாக்கினார் டால்மியா.
‘பெங்களூரில் நேஷனல் கிரிக்கெட் அகாடமி அமைக்கப்பட்டது.ஒவ்வொரு மாநில வாரியத்திலும் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்தேன். வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு உள்ளூர் பயிற்சியாளர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. நிறைய இந்தியா ஏ சுற்றுப்பயணங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் யுவ்ராஜ் சிங், கயிப், நெஹ்ரா, பர்தீவ் படேல் போன்ற இளைஞர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. ரஞ்சிக்கு அடுத்ததாக இந்தியா ஏ அணி மேட்சுகளிலும் கவனம் செலுத்தப்பட்டது. வருகிற வருமானத்தில் 25% தொகையை வீரர்களுக்காக ஆஸ்திரேலியா ஒதுக்கியது. இந்தியாவில் 26% என்று மாற்றினோம். அதிலும் 13% மட்டுமே இந்திய அணி வீரர்களுக்கு, மீதி 13% ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடுபவர்களுக்காக என்று முடிவெடுத்தேன். இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ஆனால் நீண்ட நாளாக ரஞ்சியில் ஆடுகிற வீரர்களும் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காக 13% அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது என்று ஒரு பேட்டியில் கூறினார் டால்மியா. இவர் பிசிசிஐ தலைவராக இருந்தபோது இந்திய வீரர்களுக்கு முறையான ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. முன்னாள் வீரர்களுக்கும் நடுவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் பள்ளிகளில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த சமயத்தில் (நேரத்தை வீணடிக்கிறது என்பதால்), 1996 உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு அங்கு முத்தரப்பு சர்வதேசப் போட்டியை நடத்தினார் டால்மியா. அந்தப் போட்டியைக் காண வந்த சிங்கப்பூர் பிரதமர், சிங்கப்பூரில் கிரிக்கெட் மைதானத்தைக் கட்ட 16 ஏக்கரை வழங்கினார். பள்ளிகளில் கிரிக்கெட் விளையாட அனுமதியும் வழங்கினார். அந்தளவுக்கு போட்டியை அருமையாக நடத்தி அவருடைய மனதை மாற்றினார் டால்மியா.
1990களின் இறுதியில் ஊழல் குற்றச்சாட்டில் இந்திய கிரிக்கெட் சிக்கித் தவித்தபோது டால்மியா மீதும் புகார்கள் எழுந்தன. கிரிக்கெட் நிர்வாகிக்குத் தெரியாமல் எப்படி ஊழல் நடக்கமுடியும் என்று கேள்விகள் எழுந்தன. ‘சிபிஐ என்னைத் துன்புறுத்தினார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் மக்கள் என்மீது குற்றம் சுமத்தினார்கள். இந்திய அணி செல்லுமிடம் எல்லாம் பத்திரிகையாளர்களும் சென்றார்கள். அவர்களுக்கு இதுபற்றி தெரியுமா? அதுபோலத்தான்’ என்று ஒரு பேட்டியில் தன் வேதனையை வெளிப்படுத்தினார் டால்மியா.
*
பிசிசிசியில் அவருடைய ஆளுமை 2005ல் முடிவுக்கு வந்தது. சரத் பவார், பிசிசிஐ தலைவர் ஆனார். இந்தச் சமயத்தில் சரத் பவாருக்கு தோள் கொடுத்தது என். சீனிவாசன். இதன்பின்னர் டால்மியா, வாரியத்திலிருந்து தடை செய்யப்பட்டார். 1996 உலகக்கோப்பையின்போது பணமோசடி செய்த குற்றச்சாட்டால் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 2008-ல், மீண்டும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆனார்.
2011 உலகக்கோப்பை போட்டியில் கொல்கத்தாவுக்கு நான்கு ஆட்டங்கள் என்று 2009 அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. எதுவுமே முக்கியப் போட்டிகள் இல்லை. லீக் போட்டிகள். இந்தியா-இங்கிலாந்தின் லீக் ஆட்டம் மட்டுமே முக்கியமானது. உலகக்கோப்பைப் போட்டிக்காக ஈடன் கார்டன்ஸை மாற்றி அமைக்க முடிவு செய்தார் டால்மியா. கட்டுமான வேலைகளில் தாமதம் ஏற்பட்டபோது ஐசிசி எச்சரிக்கை செய்தது. ‘நாங்க ஒண்ணும் முதல்முறையா உலகக்கோப்பை போட்டியை நடத்தலை. ஒரு உலகக்கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியையும் (1987) அரையிறுதிப் போட்டியையும் (1996) நடத்திய அனுபவம் எங்களுக்கு இருக்கு. எங்க நிர்வாகத்தையெல்லாம் ஒருபோதும் சந்தேகப்படாதீங்க' என்று பதிலளித்தார் டால்மியா. ஆனால் போட்டி நெருங்கும் சமயத்திலும் வேலைகள் நடந்ததால் இந்தியா-இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை போட்டி வேறு மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது டால்மியா பிசிசிஐயுடன் நல்லுறவில் இல்லாததும் இதோடு இணைத்துப் பார்க்கப்பட்டது.
ஆனால் டால்மியா தொடர்ந்து போராடினார். மோசடி வழக்குகளிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ‘நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க பிசிசிஐ தலைவர் பதவிக்கு முயற்சி செய்வேன். என் எதிரிகளுக்குப் பதில் சொல்ல அதுதான் பொருத்தமாக இருக்கும்.' என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டியளித்தார். அது ஐபிஎல் ரூபத்தில் வந்து பதிலளிக்கும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஐபிஎல் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகளால் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டன. 2013-ல் பிசிசிஐ-யின் இடைக்காலத் தலைவர் ஆனார். 2015 மார்ச்சில் மீண்டும் பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் டால்மியா.
2011 உலகக்கோப்பையின்போது ஈடன் கார்டன்ஸுக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கினார். 2016 டி20 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடக்கும் என்று சமீபத்தில் அறிவித்தார். ஈடன் கார்டன்ஸை விடவும் இறுதிப் போட்டியை நடத்த சிறந்த மைதானம் உண்டா என்பது அவருடைய எண்ணம்.
உலகக்கோப்பையை நடத்தவேண்டுமா, கூப்பிடு டால்மியாவை, தொலைக்காட்சி உரிமத்தில் பணம் அள்ளவேண்டுமா டால்மியாவிடம் பொறுப்பைக் கொடு, வீரர்களுக்கு ஏற்ற வசதிகள் தேவையா, டால்மியாவிடம் தெரிவித்துவிடு, ஐபிஎல்-லில் ஊழலா, டால்மியா இருக்கிறார் கவலையில்லை என்கிற நிலை தான் இதுவரை இருந்தது. டால்மியாவை இழந்ததை விடவும் வேறு பெரிய இழப்பு பிசிசிஐக்கு இருக்காது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.