/

 ஒலிம்பிக்கில் சாதிக்க இனி என்ன செய்ய வேண்டும்?

 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தவுடன் இந்தியாவின் நிலையைப் பார்த்து பரிதாபப்படுவோம். அடுத்த 10 நாள்களுக்கு இந்திய வீரர்கள் குறித்து வாய்க்கு வந்தபடி வசைபாடுவோம். அதோடு மறந்த

News image
Updated On :27 ஆகஸ்ட் 2016, 7:20 am

ஏ.வி. பெருமாள்

 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தவுடன் இந்தியாவின் நிலையைப் பார்த்து பரிதாபப்படுவோம். அடுத்த 10 நாள்களுக்கு இந்திய வீரர்கள் குறித்து வாய்க்கு வந்தபடி வசைபாடுவோம். அதோடு மறந்துவிடுவோம். இதுதான் காலம் காலமாக தொடர்கிறது.
 ரியோ ஒலிம்பிக்கை இரண்டு பதக்கங்களோடு நிறைவு செய்துவிட்டது இந்தியா. அதைப் பற்றி இனி பேசுவதால் எந்த பலனும் இல்லை. ஒலிம்பிக் போன்ற உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவால் ஏன் சாதிக்க முடியவில்லை? விளையாட்டை மேம்படுத்த இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய தருணம் இது.
 உள்கட்டமைப்பு: முதலில் நாம் செய்ய வேண்டியது விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை போதுமான அளவு ஏற்படுத்துவது. இந்தியாவில் பெரு நகரங்களில்கூட பெரிய அளவில் மைதானங்கள் இல்லை. இருக்கின்ற சில மைதானங்களும் வணிக நோக்கில் பள்ளிகள், கல்லூரிகள் விளையாட்டுப் போட்டி நடத்துவதற்கும், தனியார் நிகழ்ச்சிகளுக்காகவும் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். சர்வதேச தரத்திலான மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும். அது எப்போதுமே விளையாட்டு வீரர்களுக்காக திறந்திருக்க வேண்டும்.
 அரசு விளையாட்டு விடுதிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். தற்போதுள்ள அரசு விளையாட்டு விடுதிகள் பெயரளவிலேயே செயல்பட்டு வருகின்றன. தரமான உணவு கிடையாது. சில விடுதிகளில் பயிற்சி பெறுவதற்கு மைதானங்களோ, பயிற்றுவிக்க பயிற்சியாளரோ இல்லாத நிலைதான் இன்றும் தொடர்கிறது.
 தமிழக விளையாட்டு விடுதிகள் சிலவற்றில் பயிற்சியாளர்கள் இல்லாததால், அதில் சேர்வதற்கு மாணவர்கள் தயங்கியதாகவும், அதன் காரணமாகவே இந்த ஆண்டு விளையாட்டு விடுதிகளுக்கு மாணவர் சேர்க்கை மூன்று முறைக்கு மேல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 விளையாட்டு விடுதிகளை பெயரளவில் நடத்துவதன் மூலம் நிச்சயம் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது. அதன் தரம் உயர்த்தப்பட வேண்டும். மைதானம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 இதையெல்லாம்விட முக்கியமானது தகுதியான பயிற்சியாளரை அடையாளம் கண்டு நியமனம் செய்வது. இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் சாத்தியமானால்தான், விளையாட்டு விடுதிகளில் இருந்து சர்வதேச தரத்திலான வீரர்கள் உருவாகுவார்கள்.
 இன்றைக்கு விளையாட்டு விடுதிகளில் இருக்கிற பெரும்பாலான பயிற்சியாளர்கள், இருக்கையை தேய்க்கக் கூடியவராகவும், ஆர்வமின்றியுமே காணப்படுகிறார்கள். ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் அணியை மேம்படுத்துவதற்கு குறிப்பிட்ட காலஅவகாசம் அளிக்க வேண்டும். அதில் அவருடைய செயல்பாடு சிறப்பாக அமையாவிட்டால் அவரை நீக்க வேண்டும். இதன்மூலம் பயிற்சியாளர்களை சிறப்பாக செயல்பட வைக்க முடியும்.
 தன்னம்பிக்கை: பயிற்சியாளர் என்பவர் வீரர்களுக்கு விளையாட்டை மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது. வீரர்களின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு தேவையான தன்னம்பிக்கையை அளிப்பவராகவும், உத்வேகம் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் பங்கேற்ற டூட்டி சந்த், "மைதானத்தில் இருந்த பெருங்கூட்டத்தை பார்த்ததுமே பயமும், பதற்றமும் தொற்றிக்கொண்டது. என்னுடன் போட்டியில் பங்கேற்றவர்கள் மிக உயரமாக இருந்தார்கள்' என கூறியிருந்தார். இதிலிருந்தே அவர் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே நாம் தோற்றுவிட்டோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதை உணர முடிகிறது. டூட்டி சந்தின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவரிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த தவறியதற்கு யார் பொறுப்பேற்பது?
 இந்த நேரத்தில் பாட்மிண்டன் கோபிசந்தையும் நினைவுகூர வேண்டும். அவர் சிந்துவுக்கு பயிற்சியை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் சேர்த்தே அளித்ததால்தான் வெள்ளிப் பதக்கம் சாத்தியமானது.
 ஆரம்பத்தில் சிந்து நம்பிக்கையில்லாமல் இருந்ததை உணர்ந்த கோபிசந்த், சிந்துவை களத்தில் நின்று ஆக்ரோஷமாக கத்துமாறு கூறியிருக்கிறார். ஆனால் சிந்துவால் கத்த முடியவில்லை. மாறாக அழுகைதான் வந்திருக்கிறது. அதன்பிறகு சிந்துவை மனத்திடம் மிக்க வீராங்கனையாக மாற்றினார் கோபிசந்த். சிந்து ஒலிம்பிக்கில் ஆடியபோது, எவ்வளவு ஆக்ரோஷமாக கர்ஜித்தார் என்பது போட்டியைப் பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். எனவே பயிற்சியோடு சேர்த்து தன்னம்பிக்கையையும் ஊட்டக்கூடிய கோபிசந்த் போன்ற பயிற்சியாளர்கள்தான் இப்போது நமக்கு தேவை.
 அகாதெமி: சர்வதேச தரத்திலான விளையாட்டு அகாதெமிகளை அமைக்க வேண்டும். அந்த அகாதெமி வளாகத்தில் வீரர்கள் தங்குவதற்கான அறைகள், விளையாடுவதற்கான மைதானம், பயிற்சிக்கான உபகரணங்கள், பயிற்சியாளர், முடநீக்கியல் நிபுணர், மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், உணவு கட்டுப்பாட்டாளர் (டயட்டீசியன்), ஆடியோ மற்றும் விடியோ ஆய்வுக்கூடம், பயோ ஆய்வுக்கூடம், கல்விக்கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கே அமைய வேண்டும்.
 இந்த அகாதெமிகளுக்கான வீரர்கள் தேர்வு, அமைச்சர், அரசியல்வாதி என யாருடைய தலையீடும் இல்லாமல் வெளிப்படையாக நடைபெற வேண்டும். அது தொடர்பான அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்படி செய்தால்தான் திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். தகுதியற்றவர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க முடியும்.
 அடையாளம் காணுதல்: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கும், சாக்ஷிக்கும் போட்டி போட்டுக்கொண்டு கோடிக்கணக்கில் ரொக்கப் பரிசுகளை அறிவிக்கிறார்கள். அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். அவர்களை கொண்டாடட்டும். அவர்கள் இருவரும் அதற்கு தகுதியானவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவதற்கோ, அவர்களின் வளர்ச்சிக்கோ எந்த முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இளம் வீரர்கள் ஊக்குவிக்கப்படுவது அவசியம். அப்படி செய்தால் மட்டுமே ஏராளமான சிந்துக்களும், சாக்ஷிக்களும் கிடைப்பார்கள். அதைச் செய்யாமல் பதக்கம் வென்ற ஒரு சிலருக்கு மட்டும் பரிசுகளை வாரிக் குவிப்பதன் மூலம் எந்த மாற்றமும் ஏற்படாது.
 அடுத்ததாக, ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை அணியைத் தேர்வு செய்வது முற்றிலும் தவறானது. 2020 ஒலிம்பிக் போட்டிக்கான அணியை 2016-ல் இறுதி செய்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு பயிற்சியளித்தால்தான் பதக்கம் வெல்ல முடியும். ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு எல்லா விளையாட்டுகளுக்கும் அணியை அனுப்புவதற்கு பதிலாக, பதக்க வாய்ப்புள்ள விளையாட்டுகளை அடையாளம் கண்டு அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
 விளையாட்டு அமைப்புகள்: இந்தியாவில் உள்ள விளையாட்டு அமைப்புகள், ஊழல், கோஷ்டி பூசல் என ஏராளமான பிரச்னைகளால் செல்லரித்துப் போயிருக்கின்றன. இந்த சங்கங்களை நிர்வகிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன. அதனால் போட்டிகள் நடைபெறுவது தடைபடுகிறது. வீரர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
 ஊழல், கோஷ்டி பூசல் காரணமாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் அங்கீகாரத்தை சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் ரத்து செய்துள்ளது. இதன்காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறவில்லை. அதன் விளைவு ரியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை மூலம் இந்தியாவுக்கு ஒரு பதக்கம்கூட கிடைக்கவில்லை.
 அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இந்த சங்கங்களின் பக்கம் வராமல் இருந்துவிட்டாலே, பாதி பிரச்னை தீர்ந்துவிடும். விளையாட்டு சங்கங்களை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் விதிமுறைப்படி மத்திய, மாநில அரசுகள், விளையாட்டு அமைப்புகளின் விஷயத்தில் நேரடியாக தலையிட முடியாது என்றாலும், நிதியுதவியை நிறுத்தி நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால் மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுக்காக இவ்வளவு செலவிட்டோம் என அறிக்கை வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்வதோடு நின்றுவிடுகின்றன. இனியாவது மத்திய, மாநில அரசுகள், விளையாட்டு சங்க விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
 நம் நாட்டின் தெருக்களிலும், மூலை முடுக்குகளிலும் உசேன் போல்ட்டும், மைக்கேல் பெல்ப்ஸும் ஒளிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பதுதான் உண்மை. மேற்கண்ட விஷயங்களையெல்லாம் செய்யாமல், கோடிக்கணக்கான பணத்தை செலவிடுவதன் மூலம் மட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. பதக்கப் பட்டியலில் பார்வைக்கு எட்டாத இடத்தில்தான் இந்தியா இருக்கும்.

 
 ஒவ்வொரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போதும்,
 உலக வரைபடத்தில் ஒளிந்திருக்கும் நாடுகள் எல்லாம் பதக்கத்தை
 குவிக்கின்றன. ஆனால் 125 கோடிக்கும் மேற்பட்ட
 மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவுக்கு மிஞ்சுவது என்னவோ ஏமாற்றம்தான். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கங்கள் இரண்டு. பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்த இடம் 67.
 
 அடுத்த தலைமுறை வீரர்களை
 உருவாக்குவதற்கோ, அவர்களின்
 வளர்ச்சிக்கோ எந்த முயற்சியும்
 எடுக்கப்படுவதில்லை.
 இளம் வீரர்கள் ஊக்குவிக்கப்படுவது அவசியம். அப்படி செய்தால் மட்டுமே ஏராளமான சிந்துக்களும்,
 சாக்ஷிக்களும் கிடைப்பார்கள்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.