

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரிதாக எந்த ஆச்சரியமும் இல்லாத வகையில் ஆடுகளங்களுக்கு ஏற்ற ஒரு சொகுசான அணியைத் தேர்வு செய்துள்ளது இந்தியத் தேர்வுக்குழு.
அணி அறிவிக்கப்படும் முன்பு சில கேள்விகள் இருந்தன. ரஹானே, பாண்டே இருவரில் யார் அணியில் இடம்பிடிப்பார்கள்? அதேபோல ஹர்பஜன், நெகி இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? புவனேஸ்வர் குமார் அணியில் நீடிப்பாரா? ஷமி மீண்டும் அணிக்குத் திரும்புவாரா என சில கேள்விகளுக்கு மட்டுமே விடை தேவைப்பட்டன.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தோற்று குழப்பமான அணியாக இருந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது முதல் மிகவும் நம்பிக்கை வாய்ந்த அணியாகவே உள்ளது. இதனால் தேர்வுக்குழுவும் சில அழுத்தமான முடிவுகளை எடுக்க வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்த அணியில் பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கக்கூடியது: பவன் நெகியின் தேர்வு. இலங்கை டி20 தொடருக்காக முதல்முறையாக இந்திய அணிக்கு அழைக்கப்பட்ட நெகி, இப்போது உலகக்கோப்பை அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். நெகி, பின்வரிசையில் மிகச்சிறப்பாக ஆடி ரன் குவிக்கும் ஆற்றல் பெற்றவர். தோனி எதிர்பார்க்கும் ஆல்ரவுண்டர் திறமை நெகியிடம் உள்ளதால் அவருக்கு இந்தத் தங்கவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அஸ்வினோ, ஜடேஜாவோ சொதப்புகிற பட்சத்தில் ஆல்ரவுண்டர் என்கிற உரிமையில் நெகிக்கே நேராக அணிக்குள் நுழைய வாய்ப்புண்டு.
கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடாத புவனேஸ்வர் குமார் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றார். இதேபோல் மணீஷ் பாண்டேவும் ஆஸ்திரேலியாவில் விளையாடினார். இருவருமே உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை. ரஹானேவால் பாண்டேவுக்கும் பூம்ராவால் புவனேஸ்வருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற ரிஷி தவன், குர்கீரத் சிங், உமேஷ் யாதவ் ஆகியோருக்கும் இலங்கைக்கு எதிரான தொடரிலும் மட்டுமல்ல உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை அணிகளிலும் இடம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாததால் இந்தக் கதி ஏற்பட்டுள்ளது.
தசைநார் முறிவு காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி, ஆஸ்திரேலியா தொடரிலிருந்து விலகினார். இப்போது காயத்திலிருந்து மீண்டு வந்து வழக்கம்போல தன் திறமையை வெளிப்படுத்துவார் என தேர்வுக்குழுவும் தோனியும் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர் 2015 ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகள் எதிலும் ஆடவில்லை. ஷமி விஷயத்தில் பெரிய ரிஸ்க் எடுக்கப்பட்டாலும் அவருடைய கடந்தகால பங்களிப்புகள்தான் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளன.
ஆஸி.க்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் கடைசி ஓவரில் யுவ்ராஜ் அடித்த ஃபோரும் சிக்ஸரும்தான் அவரைக் காப்பாற்றி உள்ளது. ஹர்பஜனுக்கு ஆஸி.யில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் நீக்குவதற்கான காரணம் எதுவும் இல்லையென்பதால் அவரும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும். (அப்படி இருக்கவேண்டியதில்லை. எல்லா அணிகளுக்கும் ஏற்றாற்போல இருக்கும் என்று ஒருமுறை ஐசிசி நிர்வாகி கூறியிருந்தார். இருந்தாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த ஆடுகளங்களையே நாம் எதிர்பார்க்க முடியும்.) எனவே இந்திய அணியில் ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். மேலும் தோனிக்கு ஆல்ரவுண்டர்கள் மீது எப்போதும் ஒரு கண் உண்டு. அந்த வகையில் யுவ்ராஜ், நெகி, பாண்டியா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டியில் வழக்கமான பந்துவீச்சாளர்கள் சொதப்பும்போது கூடுதலாக ஆல்ரவுண்டர்கள் இருந்தால் அது வசதியாக இருக்கும் என்று தோனி அடிக்கடி கூறுவார். அதன்படியே ஆல்ரவுண்டர்கள் மிகுந்த இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 15 பேரில் ஷமி, நெஹ்ரா, பூம்ரா என மூன்று பேருக்கு மட்டுமே பேட்டிங் திறமை இல்லை என்பதையும் பார்க்கவேண்டும்.
இந்த அணியிலிருந்து 11 பேரைத் தேர்வு செய்வதற்குக்கூட தோனி மெனக்கெட வேண்டாம். ஆஸி. டி20 யில் ஆடிய அதே அணிதான் பெரும்பாலும் உலகக்கோப்பை போட்டியிலும் இடம்பிடிக்கப்போகிறது. ரஹானே அல்லது யுவ்ராஜ், நெஹ்ரா அல்லது ஷமி, பாண்டியா அல்லது நெகி என்கிற வகையில் சுலபமான குழப்பங்கள் மட்டுமே தோனிக்கு இருக்கும்.
அனைத்தும் சுபம் என்றாலும் லேட் மிடில் ஆர்டரின் பங்களிப்பை மட்டுமே இப்போது சந்தேகத்துக்கு உரியதாக வைத்துக்கொள்ளலாம். சமீபத்திய போட்டிகளில் முதல் மூன்று, நான்கு வீரர்களே அனைத்து ஓவர்களையும் ஆடிவிட்டதால் இந்தக் கேள்வி அவசியமாகிறது. ஆனால் இலங்கை டி20 தொடர், ஆசிய கோப்பை இரண்டிலும் சரியான விடை கிடைத்துவிடும். தகுந்த பயிற்சியும் அவர்களுக்கு உரிய இடமும் உறுதிப்பட்டுவிடும். இதனால் சரியான பயிற்சிகளுடனே உலகக்கோப்பை போட்டிக்குள் இந்திய அணி நுழையும்.
தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரில் தோற்றது இந்திய அணியை மிகவும் உலுக்கிவிட்டது. அதுவும் சொந்த மண்ணில் அப்படியொரு தோல்வி. ஆனால் ஆஸி. டி20 தொடரில் கிடைத்த வெற்றியால் இந்திய அணி திடீரென பளிச் என்று உலகக்கோப்பைப் போட்டிக்குத் தயாராகி நிற்பதுபோல தோற்றம் தருகிறது. இதனால் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தில் உள்ளது. எல்லாமே கூடிவந்தது போல இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியை இந்திய அணி வென்று இந்திய ரசிகர்களுக்குப் பேரின்பத்தை அளிக்குமா என்கிற ஆவல் பிறந்துள்ளது.
கோப்பையை வெல்லக்கூடிய அணி என்கிற முத்திரையுடன் களமிறங்குவது இந்திய அணிக்குப் புதிய அனுபவம்தான். அத்தனை சவால்களையும் தாண்டி தோனி படை தன் திறமையை எந்தளவுக்கு வெளிப்படுத்தப் போகிறது என்பது உண்மையிலேயே பெரிய ஆவலைத் தூண்டுவதாக உள்ளது. ஆச்சரியங்களுக்குக் காத்திருப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.