டி20: இந்தியாவுக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூஸிலாந்து

இன்று தொடங்கிய இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 126 ரன்கள் எடுத்தது.
டி20: இந்தியாவுக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூஸிலாந்து
Published on
Updated on
2 min read

இன்று தொடங்கிய இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 126 ரன்கள் எடுத்தது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-10 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கின. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தெரிவு செய்தார்.  ஆச்சரியப்படும் வகையில், நியூஸிலாந்து அணி இந்த ஆட்டத்தில் 3 சுழற்பந்து வீச்சாளர்களை  சேர்த்துள்ளது.

கேப்டன் வில்லியம்சன் மார்டின் கப்டில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். அஸ்வின் வீசிய முதல் ஒவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை தொடங்கினார் கப்டில். எனினும், இரண்டாவது பந்தை ஸ்வீவ் செய்ய முயன்ற போது, பந்து கால்காப்பில் பட்டது. அஸ்வினின் நீண்ட முறையீட்டுக்குப் பிறகு நடுவர் தர்மசேனா அவுட் வழங்கினார்.  கப்டிலுக்கு அதிர்ஷ்டமில்லை.  டிவி ரீப்ளேவில் பந்து விக்கெட்டை விட்டு விலகி செல்வது தெளிவாக தெரியவந்தது.

மூன்றாவது வீரராக வந்த முன்ரோ தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்ஸர் விளாசினார். எனினும், அவர் நெடுநேரம் நிலைக்கவில்லை. நெஹ்ரா வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்று பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதற்கு பின்பு உள்ளே வந்த ஆண்டர்சனும், வில்லியம்சனும் நிதானமாக ரன்களை குவித்தனர். இதையடுத்து ரெய்னாவை பந்து வீச அழைத்தார் தோனி. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் தோனி்யாவில் 'ஸ்டம்ப்'  அவுட்டானார்  வில்லியம்சன்.  16 பந்துகளை சந்தித்த வில்லியம்சன் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதையடுத்து விளையாட வந்த அனுபவ வீரர் ராஸ் டெய்லரை அற்புதமான ரன்-அவுட் மூலம் வெளியேற்றினார் ரெய்னா. அவர் வீசிய பந்தை ஆண்டர்சன் நேராக அடித்தார். அதை பாய்ந்து பிடித்தார் ரெய்னா. அப்போது பவுலிங் கீரிஸை விட்டு வெளியே நின்ற ராஸ் டெய்லரை கண் இமைக்கும் நேரத்தில் ரன்-அவுட் செய்தார் ரெய்னா.  அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

ஜடேஜா வீசிய 12-வது ஒவரின் போது தோனிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. அந்த ஒவரில் நியூஸிலாந்து அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது.

இதையடுத்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஆண்டர்சனை வெளியேற்றினார் பூம்ரா. யார்கர் பந்தை பின்புறமாக அடிக்க முயன்ற ஆண்டர்சன் 'மிடில் ஸ்டம்பை' பறிகொடுத்தார். அவர் 42 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகளும் அடங்கும். அதன் பின்பு வந்த நியூஸிலாந்து வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை.

நியூஸிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் பந்து வீசியவர்களில் பாண்டியா தவிர அனைத்து பந்து வீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com