இந்தியா 'த்ரில்' வெற்றி: ஒரு ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தியது

பெங்களூரில் நடைபெற்ற உலகக் கோப்பை இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை ஒரு ரன்னில் வீழ்த்தியது.
இந்தியா 'த்ரில்' வெற்றி: ஒரு ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தியது
Published on
Updated on
3 min read

பெங்களூரில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை ஒரு ரன்னில் வீழ்த்தியது. 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய வங்கதேச அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அந்த அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவர்களில் 42 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா 16 பந்துகளில் 1 சிக்ஸர், 1  பவுண்டரியுடன் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவன் 22 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். தவனும், சர்மாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து விராட் கோலியுடன் இணைந்தார் சுரேஷ் ரெய்னா. வழக்கமாக அதிரடியாக ஆடும் விராட் கோலி இன்று தடுமாறினார்.

வங்கதேச வீரர்களின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் கச்சிதமான  பீல்டிங் காரணமாக இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்டத்தின்  11-ஆவது ஓவரில் ரெய்னா இரு சிக்ஸர்களை விளாச, ஆட்டம் சூடுபிடித்தது.

 இந்தியா 95 ரன்களை எட்டியபோது விராட் கோலி ஆட்டமிழந்தார்.

ஷுவகதா ஹோம் வீசிய 14-வது ஓவரில் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ரெய்னா. அதே ஓவரில் மூன்றாவது பந்தை மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார் கோலி. அடுத்த பந்தையும் அதே முறையில் அடிக்க முயன்ற கோலி, விக்கெட்டை பறிகொடுத்தார். கோலி-ரெய்னா ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து வந்த பாண்டியா சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர், அல்ஹசன் ஓவரில் இரு பவுண்டரிகளை விளாச, 15 ஓவர்களில் 112 ரன்களை எட்டியது இந்தியா.

15-ஆவது ஓவரை வீசிய அல்-அமீன், முதல் இரு பந்துகளில் முறையே ரெய்னா மற்றும் பாண்டியாவை வீழ்த்தினார். ரெய்னா 23 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 30, பாண்டியா 7 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து கேப்டன் தோனியுடன் இணைந்தார் யுவராஜ் சிங்.  தொடர்ந்து சொதப்பி வரும் யுவராஜ் இந்த முறையும் சோபிக்கவில்லை. 6 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த யுவராஜ் பகுதிநேர பந்துவீச்சாளர் மஹமத்துல்லா பந்தில் அல்-அமீனிடம் கேட்ச் ஆனார். பின்னர் ஜடேஜா, கேப்டன் தோனியுடன் இணைந்தார். இந்த ஜோடி 19-வது ஓவரில் 14 ரன்கள் குவித்தது.

கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா 12 ரன்களில் வெளியேற, இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 13 ரன்கள் எடுத்தார்.

வங்கதேச பந்துவீச்சாளர்கள் அல்-அமீன் ஹூஸைன், முஸ்தாப்ஷியூர் ரஹ்மான் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் வங்கதேச அணி விளையாட தொடங்கியது. இந்திய வீரர்கள் மிக மோசமாக பீல்டிங் செய்தனர். பூம்ரா தனக்கு நேராக வந்த பந்தை சரியாக பிடிக்காததால் அது பவுண்டரிக்கு சென்றது. ஐந்தாவது பந்தை பவுலருக்கு நேராக அடித்தார் தமீம் இக்பால். அதை கேட்ச் செய்ய தவறினார் நெஹ்ரா.

அஸ்வின் வீசிய மூன்றாவது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் மித்துன். அவர் 3 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.

இன்றைய தினம் இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. அஸ்வின் பந்தை தூக்கி அடித்தார் தமீம் இக்பால். கைக்கு நேராக வந்த பந்தை தவறவிட்டார் பூம்ரா.

கேட்சை கோட்டைவிட்டு சோர்ந்த நிலையில் இருந்த பூம்ராவை பந்துவீச அழைத்தார் தோனி. தமீம் இக்பால் அந்த ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். இதனால் வங்கதேச ரன் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த தமீம் இக்பாலை வெளியேற்றினார் ஜடேஜா. இறங்கி வந்து அடிக்க முயன்ற தமீம், பந்தை தவறவிட, கச்சிதமாக ஸ்டம்பிங் செய்தார் தோனி.

இதேபோல மற்றொரு முனையில் விளாசிக் கொண்டிருந்த சபீர் ரகுமானை வெளியேற்றினார் பகுதி நேர பந்துவீச்சாளர் ரெய்னா. வைடாக வீசிய பந்தை சரியாக கணிக்கவில்லை ரகுமான். கண் இமைக்கும் நேரத்தில் அவரை ஸ்டம்பிங் செய்தார் தோனி.

ரன் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் உள்ள வந்தார் வங்கதேச கேப்டன் மொர்தாஷா. ஒரு சிக்ஸர் மட்டுமே விளாசிய அவர் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முறையே வீசிய 12, 13 ஓவர்களில் வங்கதேச அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதேநேரத்தில் முக்கிய வீரரான ஷாகிப் அல் ஹஸனை இழந்தது. அஸ்வின் பந்தில் ஸ்லிப்பில் நிறுத்தப்பட்ட ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஹஸன். அவர் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

கடைசி 3 ஓவர்களில் வங்கதேச அணிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. நெஹ்ரா வீசிய 18-வது ஓவரில் வங்கதேச அணி 10 ரன்கள் எடுத்தது. அதே நேரத்தில் மற்றொரு விக்கெட்டையும் பறிகொடுத்தது. சௌமியா சர்கார் 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றி பெறுவதற்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. பிரதான பந்துவீச்சாளர்கள் அனைவரும் பந்துவீசி முடித்துவிட்ட நிலையில், பந்து பாண்டியா  கைக்கு வந்தது.

முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் மஹமுத்துல்லா. இரண்டாவது, மூன்றாவது பந்தை முஷிபுர் ரஹீம் பவுண்டரிக்கு விரட்ட, மைதானமே மயான அமைதியானது. அடுத்த இரு பந்துகளில் முஷிபுர் ரஹ்மானும், மஹமத்துல்லாவும் அவுட்டாக, அனைவவரும் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர்.

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பாண்டியா வீசிய பந்தை அடிக்க தவறினார் ஷுவகதா ஹோம். எனினும் அவர் ரன் எடுக்க ஓடினார். ஒரு கிளவுசடன் தயாராக இருந்த தோனி, மறு முனையிலிருந்து ரஹ்மான் ஓடி வருமுன் ஸ்டம்பை தகர்த்து இந்தியா வெற்றியை உறுதி செய்தார்.

வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி மிக மோசமாக பீல்டிங் செய்தது. பூம்ரா, அஸ்வின், தோனி ஆகியோர் தலா ஒரு கேட்ச் தவறவிட்டனர்.

4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com