டி20 உலகக் கோப்பை: இந்தியாவை வெளியேற்றியது மேற்கு இந்திய தீவுகள்

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மேற்கு இந்திய தீவுகள். மும்பையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை: இந்தியாவை வெளியேற்றியது மேற்கு இந்திய தீவுகள்
Published on
Updated on
4 min read

மும்பை: டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மேற்கு இந்திய தீவுகள். மும்பையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக பெண்கள் பிரிவிலும் மேற்கு இந்திய தீவுகள் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் விராட் கோலி 89 ரன்கள் குவித்தார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் டேரன் சமி பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தொடக்க வீரராக சொதப்பி வரும் ஷிகர் தவனுக்குப் பதில் அஜிங்க்ய ரஹானேவும், காயம் காரணமாக விலகிய யுவராஜ் சிங்க்குப் பதில் மனீஷ் பாண்டேவும் இடம்பெற்றனர்.

இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மாவும், ரஹானேவும் ஆட்டத்தைத் தொடங்கினர். ரஷல் வீசிய முதல் ஓவரில் இந்திய அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து சுழற்பந்து வீச்சாளர் பத்ரியை கொண்டுவந்தார் சமி. இரண்டாவது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே வந்தது.

பாரத்வைட் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு தூக்கினார் ரோஹித் சர்மா. இந்த தொடர் முழுவதும் சோபிக்காத ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் அபராமாக விளையாடினார். ரஷல் வீசிய ஆறாவது ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார் சர்மா. 'பவர்-பிளே'  முடிவில் இந்திய அணி 55 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சர்மா, பத்ரி பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அவர் 31 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். அவர் 3 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் விளாசினார். அடுத்து உள்ள வந்தார் கோலி.

பிராவே வீசிய ஒன்பதாவது ஓவரின்போது, ரன்-அவுட்டாவதிலிருந்து இருமுறை தப்பி பிழைத்தார் கோலி.

முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ரோஹித் சர்மாவை மட்டும் இழந்து 86 ரன்கள் எடுத்தது.  12.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

இந்நிலையில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ரஹானேவை அற்புதமான 'கேட்சா'ல் வெளியேற்றினார் பிராவோ. ரஹானே 35 பந்துகளில் 2 பவுண்டரிகள் உள்பட 40 ரன்களை எடுத்தார்.

இதையடுத்து உள்ளே வந்தார் கேப்டன் டோனி. பாரத்வைட் வீசிய 17 ஓவரில் கோலி இரு பவுண்டரிகளையும், டோனி ஒரு பவுண்டரியையும் விளாசினர். அற்புதமாக விளையாடிய கோலி 33 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்.

ரஷல் வீசிய 19-வது ஓவரில் மட்டும் கோலி 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணி 19 ரன்கள் குவித்தது. கோலி ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். கேப்டன் டோனி 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

193 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டாவது ஓவரிலேயே கெயிலை இழந்தது. பூம்ரா வீசிய தாழ்வான 'புல்-டாஸ்' பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார் கெயில். அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அடுத்து உள்ளே வந்த சாமுவேல்ஸ், நெஹ்ராவின் பந்தை சரியாக கணிக்காமல் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறினார்.

இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அடுத்து வந்த சிம்மன்ஸும், தொடக்கவீரராக இறங்கிய சார்லஸும் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.

இதனிடையே அஸ்வின் வீசிய பந்துவீச்சில் 18 ரன்களில் அவுட்டானார் சிம்மன்ஸ். அந்த பந்து வீசிய விதம் குறித்து சந்தேகமடைந்த நடுவர், மூன்றாவது நடுவரிடம் விசாரித்தார். மூன்றாவது நடுவர் அதை நோ-பால் என அறிவிக்க தப்பி பிழைத்தார் சிம்மன்ஸ். மேற்கு இந்திய தீவுகள் அணி 13 ஓவர்களில் 116 ரன்கள் குவித்தது.

மேற்கு இந்திய தீவுகளை கட்டுப்படுத்துவதற்கு கேப்டன் விராட் கோலியை பந்துவீச அழைத்தார். அது கைமேல் பலன் அளித்தது. கோலி வீசிய முதல் பந்திலேயே சார்லஸை வெளியேற்றினார். அவர்  36 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் விளாசினார்.

மறுபடியும் வாழ்வு பெற்ற சிம்மன்ஸ்

பாண்டியா வீசிய 15-வது ஓவரிலும் மீண்டும் அவுட்டானார் சிம்மன்ஸ். இந்த முறை பாண்டியா பந்துவீசியது குறித்து மூன்றாவது நடுவரிடம் விசாரிக்க, அவர் நோ-பால் என அறிவித்தார். பாண்டியா வீசிய அந்த ஓவரில் மேற்கு இந்திய தீவுகள் அணி 18 ரன்களை குவித்தது. கடைசி நான்கு ஓவர்களில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு 42 ரன்கள் தேவைப்பட்டது.

18-வது ஓவரை வீசிய பூம்ரா முதல் மூன்று பந்துகளை ரன் ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை. அடுத்த மூன்று பந்துகளில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாசினார் சிம்மன்ஸ்.

கடைசி இரு ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா வீசிய 19-வது ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கும், ஆறாவது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் ரஷல்.

கடைசி ஓவரில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விராட் கோலி பந்து வீச வந்தார். நான்காவது பந்தை சிக்ஸருக்கு தூக்கி ஆட்டத்தை முடித்துவைத்தார் ரஷல்.

மேற்கு இந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிம்மன்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 83 ரன்கள் குவித்தார். அவர் 7 பவுண்டரிகளையும், 5 சிக்ஸர்களையும் விளாசினார். ரஷல் 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

83 ரன்கள் குவித்த சிம்மன்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.

இன்றைய போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். நெஹ்ரா மட்டும் குறைந்த அளவில் ரன்களை விட்டுக் கொடுத்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். மற்ற அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com