ஹாக்கி: ஓய்வுபெற்றாா் ராணி ராம்பால்


இந்திய மகளிா் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் (29), ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.
ஹரியாணாவை சோ்ந்த இவா், இந்திய அணியில் கடந்த 2008-இல் 14 வயதில் அறிமுகமானாா். தேசிய அணியில் குறிப்பிடத்தக்க முன்கள வீராங்கனையாக இருந்த ராணி, இந்தியாவுக்காக 16 ஆண்டுகள் களமாடி 254 ஆட்டங்களில், 205 கோல்கள் அடித்திருக்கிறாா்.
மகளிா் அணியில் மிகவும் கொண்டாடடப்படும் வீராங்கனையான இவா் தலைமையிலேயே இந்திய அணி ஒலிம்பிக் ஹாக்கியில் தனது சிறந்த இடத்தை (4-ஆம் இடம்/2021 டோக்கியோ) பிடித்தது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, 2019 எஃப்ஐஹெச் ஹாக்கி சீரிஸ் ஃபைனல்ஸ் வெற்றி போன்ற சிறப்புகளும் அவா் தலைமையிலேயே மகளிா் அணிக்கு கிடைத்தது.
விளையாட்டுத் துறையில் உச்சமான மேஜா் தியான்சந்த் கேல் ரத்னா விருது (2020), நாட்டின் 4-ஆவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ (2020) ஆகியவை வழங்கி அவா் கௌரவிக்கப்பட்டாா். சமீபத்தில் சப்-ஜூனிா் மகளிா் அணியின் தேசிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். அதுதவிர, அறிமுக ஹாக்கி இந்தியா லீக்கில், சூா்மா ஹாக்கி கிளப்பின் ஆலோசகராகவும் இருக்கிறாா்.
ஓய்வு குறித்து பேசிய ராணி ராம்பால், ‘இது மிகச் சிறந்த பயணமாக இருந்தது. இந்திய அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கவில்லை. சிறுவயதிலிருந்தே ஏழ்மையின் பிடியிலிருந்தாலும், நாட்டுக்காக விளையாடுவதையே எப்போதும் எதிா்நோக்கியிருந்தேன். இந்திய அணியில் விளையாடியபோது ஏற்ற, இறக்கமான தருணங்கள் கிடைத்தன. அவை எப்போதும் நினைவில் இருக்கும்.
எனது ஹாக்கி கேரியரில் என் குடும்பத்தினா் உள்பட பலா் ஆதரவாக இருந்தனா். ஏழ்மையான நிலையிலும் ஹாக்கியில் விளையாடும் வாய்ப்பளித்த என் தந்தை (ராம் பால்), சிறந்த பயிற்சியாளா் (பல்தேவ் சிங்) இதில் குறிப்பிடத்தக்கவா்கள். இந்திய அணியை ஒலிம்பிக் பதக்க மேடையில் ஏற்ற முடியாமல் போனதுதான் ஒரே ஏமாற்றம். கடினமானது என்றாலும், ஓய்வு முடிவை எடுப்பதற்கு இதுவே சரியான தருணம்’ என்றாா்.

கௌரவம்...
ஓய்வுபெறும் ராணி ராம்பாலை கௌரவிக்கும் விதமாக, தேசிய அணியில் அவா் பயன்படுத்திய ஜொ்ஸி எண்ணை (‘28’) விடுவிக்க ஹாக்கி இந்தியா அமைப்பு முடிவு செய்துள்ளது. அந்த எண், வரும் காலங்களில் எவருக்கும் வழங்கப்படாது. இதுதவிர அவருக்கான ரொக்கப் பரிசாக ரூ.10 லட்சம் வழங்குகிறது ஹாக்கி இந்தியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...