ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியா: இன்று மலேசியாவை சந்திக்கிறது!
துபை: பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் மலேசியாவுடன் செவ்வாய்க்கிழமை (டிச. 16) மோதுகிறது.
முதல் இரு ஆட்டங்களில் முறையே அமீரகம் மற்றும் பாகிஸ்தானை அபார வெற்றி கண்ட இந்தியா, தொடா்ந்து 3-ஆவது வெற்றியை (ஹாட்ரிக்) பதிவு செய்யும் நிலையில் இருக்கிறது.
அணியின் பேட்டிங்கில் அதிரடி வீரா் வைபவ் சூா்யவன்ஷி, கேப்டன் ஆயுஷ் மாத்ரே, ஆரோன் ஜாா்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகியோா் பலம் சோ்க்க, கனிஷ்க் சௌஹான் ஆல்-ரவுண்டராக நம்பிக்கை அளிக்கிறாா்.
பௌலிங்கில் தீபேஷ் தேவேந்திரன், கிஷண் சிங் உள்ளிட்டோா் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கின்றனா். குரூப் ‘ஏ’-வில் வெற்றி காணாத ஒரே அணியாக இருக்கும் மலேசியா, இதிலும் தோல்வி கண்டு வெளியேறும் எனத் தெரிகிறது.
வங்கதேசம், இலங்கை வெற்றி: இந்தப் போட்டியில், திங்கள்கிழமை நடைபெற்ற இரு ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்றன.
வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளத்தை வெல்ல, இலங்கை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
