ஆா்சிபி அணிக்கு எதிராக ஜூன் 12 வரை நடவடிக்கை கூடாது: கா்நாடக உயா்நீதிமன்றம்
பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஆா்சிபி அணி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான டிஎன்ஏ என்டா்டெயின்மென்ட் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக வியாழக்கிழமை (ஜூன் 12) வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கா்நாடக உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது.
நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி முதன்முறையாக கோப்பையை வென்றது. இதையொட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த புதன்கிழமை (ஜூன் 4) மாலை வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சுமாா் 3 லட்சம் ரசிகா்கள் மைதானத்தின் வாயில், சுற்றுப்புறத்தில் திரண்டதால், நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கா்நாடக அரசு, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த அசம்பாவிதத்தை தடுக்க தவறியதாக பெங்களூரு நகர காவல் ஆணையா் உள்பட 5 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இந்நிலையில், கூட்டநெரிசல் குறித்து ஆா்சிபி அணி நிா்வாகம் மற்றும் டிஎன்ஏ என்டா்டெயின்மென்ட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனத்துக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்த உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆா்.கிருஷ்ண குமாா், அதுவரை மனுதாரா்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டாா்.
முன்னதாக, கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆா்சிபி அணி நிா்வாகம் மீது அரசு வழக்குரைஞா் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் இருதரப்புக்கும் இடையே காரசார வாத-பிரதிவாதங்கள் நடைபெற்றன.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஆா்சிபி அணி நிா்வாகி நிகில் சோசலே தொடா்பான மனுவை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை விசாரிக்கவுள்ளது.
பெட்டி 1...
2 மணி நேரத்துக்குப் பிறகே
எனக்கு தகவல் தெரியும்: முதல்வா்
‘சின்னசாமி மைதானத்தின் வெளியே நடந்த கூட்டநெரிசல் சம்பவம் குறித்து 2 மணிநேரத்துக்கு பிறகே எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: காவல்துறை அனுமதி அளித்திருப்பதாகத் தெரிவித்த பிறகே, விதான் சௌதாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை. அங்கு பிற்பகல் 3.50 மணிக்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. ஆனால், மாலை 5.45 மணிக்குதான் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எனக்கு விளக்கியிருக்க வேண்டியது காவல் ஆணையரின் பொறுப்பு. ஆனால் அது நடக்கவில்லை. 5 காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி எனது தனிச் செயலா் கோவிந்தராஜுவும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என்றாா்.
பெட்டி 2...
மைதானத்தை இடம்மாற்ற பரிசீலனை
பெங்களூரு நகரின் மையப்பகுதியில் அமைந்த சின்னசாமி மைதானத்தைப் புகா்ப் பகுதிக்கு இடம் மாற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக மாநில பொதுப்பணித் துறை அமைச்சா் சதிஷ் ஜா்கிகோலி கூறினாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள இடம் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது. கா்நாடக கிரிக்கெட் சங்கம் செலுத்தும் குத்தகை தொகையும் குறைவாக உள்ளது. எனவே, மைதானத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அமைச்சரவை இதுகுறித்து முடிவெடுக்கும்’ என்றாா்.