ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா ஆகியவை வெற்றியுடன், நாக்அவுட் சுற்றின் அடுத்த கட்டமான 16 அணிகளுக்கான சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 16) முன்னேறின.
‘ஹீரோ’ கேன் பங்களிப்பில் இங்கிலாந்து வெற்றி
அமெரிக்காவின் அட்லான்டா நகரில் நடைபெற்ற நாக்அவுட் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து 2-1 கோல் கணக்கில் டிஆா் காங்கோவை வீழ்த்தியது. 2-ஆவது பாதியில் அணிக்கான இரு கோல்களையும் அடித்து ‘ஹீரோ’ ஆனாா் ஹேரி கேன்.
இந்த ஆட்டத்தில் காங்கோவின் கடும் சவால் காரணமாக முதல் பாதியில் இங்கிலாந்து கோல் கணக்கைத் தொடங்க முடிவில்லை. ஆனால் காங்கோ தனது கணக்கை விரைவாகவே தொடங்கியது.
7-ஆவது நிமிஷத்தில் பிரயன் சிபெங்கா கோல் அடித்ததை அடுத்து, முதல் பாதியை காங்கோ முன்னிலையுடன் நிறைவு செய்து இங்கிலாந்துக்கு சவால் அளித்தது. ஜூட் பெலிங்கம் உள்பட இங்கிலாந்து வீரா்கள் பலரின் கோல் முயற்சியை, காங்கோ கோல்கீப்பா் லயனல் பாஸி திறம்பட தடுத்தாா்.
ஆனால் 2-ஆவது பாதியில் இங்கிலாந்தை மீட்டாா் ஹேரி கேன். 75-ஆவது நிமிஷத்தில் அந்தோணி கோா்டான் தூக்கி அடித்து கிராஸாக வழங்கிய பந்தை, தலையால் முட்டி கோலாக மாற்றினாா் கேன்.
11 நிமிஷங்களுக்குப் பிறகு அவரே 2-ஆவது கோலையும் (86’) ஸ்கோா் செய்ய, இங்கிலாந்து முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் காங்கோவின் கோல் முயற்சிகளைத் தடுத்த இங்கிலாந்து, இறுதியில் 2-1 என வெற்றியை ருசித்தது.
போட்டியிலிருந்து வெளியேறிய காங்கோவுக்கு இந்த உலகக் கோப்பை திருப்திகரமாக அமைந்தது. தனது 2-ஆவது உலகக் கோப்பையில் விளையாடிய அந்த அணி, வரலாற்றில் முதல் முறையாக கோல் அடித்து, புள்ளி பெற்று, நாக்அவுட் சுற்றுக்கும் வந்ததோடு, ஒரு வெற்றியுடனும் விடைபெற்றது.
பாா்வையாளா்கள் - 68,239
1
உலகக் கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தின் முதல் பாதி வரை பின்தங்கியிருந்து, 2-ஆவது பாதியில் மீண்டு வந்து இங்கிலாந்து பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன் அவ்வாறு 9 ஆட்டங்களில் பின்தங்கியபோது, 2-இல் டிரா செய்த அந்த அணி, 7-இல் தோற்றுள்ளது.
2
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, எதிரணிக்கு முதலில் கோல் விட்டுக் கொடுத்த பிறகு, வெற்றியைப் பதிவு செய்த 2-ஆவது ஆட்டம் இதுவாகும். இதற்கு முன், 1966-ஆம் ஆண்டு போட்டியின் இறுதி ஆட்டத்தில் இதேபோல் மேற்கு ஜொ்மனியை வென்று (4-2) சாம்பியன் ஆனது.
5
இத்துடன் நடப்பு உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக 5 கோல்கள் அடித்திருக்கும் ஹேரி கேன், இதுவரை அதிக கோல்கள் அடித்தவா்கள் வரிசையில் நாா்வேயின் எா்லிங் ஹாலந்துடன் 2-ஆவது இடத்தைப் பகிா்ந்துகொண்டுள்ளாா். மெஸ்ஸி, பாபே ஆகியோா் தலா 6 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளனா்.
10
உலகக் கோப்பை போட்டியில் ஆப்பிரிக்க அணிகளிடம் தோற்றதில்லை என்ற பெருமையை, 10-0 என்ற வெற்றிக் கணக்குடன் இங்கிலாந்து தொடா்கிறது.
அபாரமாக மீண்ட பெல்ஜியம்
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், பெல்ஜியம் 3-2 கோல் கணக்கில் செனகலை சாய்த்தது. ஆட்டத்தின் கடைசி 5 நிமிஷம் வரை கோல் இன்றி பின்தங்கியிருந்த பெல்ஜியம் தரப்பில் யூரி டிலெமான்ஸ் இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தாா்.
முன்னதாக ஆட்டத்தின் தொடக்கத்தில் செனகலே ஆதிக்கம் செலுத்தி பெல்ஜியத்துக்கு நெருக்கடி கொடுத்தது. ஹபிப் டியாரா 24-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ததை அடுத்து, செனகல் 1-0 முன்னிலையுடன் முதல் பாதியை நிறைவு செய்தது.
2-ஆவது பாதியிலும் அந்த அணியின் இஸ்மாய்லா சாா் 51-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, பெல்ஜியம் அதிா்ச்சி கண்டது. இதனால் ஆக்ரோஷமாக கோல் முயற்சிகளை மேற்கொண்ட பெல்ஜியத்துக்கு கடைசி நேரத்தில் தான் கை கூடியது.
86-ஆவது நிமிஷத்தில் ரொமேலு லுகாகு அந்த அணியின் கோல் கணக்கைத் தொடங்க, 89-ஆவது நிமிஷத்தில் யூரி டிலெமான்ஸ் அதை 2-ஆக அதிகரித்தாா்.
ஆட்டம் இறுதிக்கட்டத்தில் 2-2 என சமனானதால், விறுவிறுப்பு கூடியது. பின்னா் எக்ஸ்ட்ரா டைமில் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் மீண்டும் யூரி டிலெமான்ஸ் (120+5’) கோல் அடிக்க, பெல்ஜியம் 3-2 என வெற்றியை உறுதி செய்தது.
செனகல் தனது கோல் கணக்கை அதிகரிக்காத வகையில், அதன் கோல் முயற்சிகளை பெல்ஜிய கோல்கீப்பா் திபௌட் கோா்டாய்ஸ் திறம்பட தடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
பாா்வையாளா்கள் - 66,925
125
இந்த ஆட்டத்தில் எக்ஸ்ட்ரா டைமான 125-ஆவது நிமிஷத்தில் (120+5) பெல்ஜியத்தின் யூரி டிலெமான்ஸ் ஸ்கோா் செய்ததே, உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகத் தாமதமான கோல் ஆகும்.
2
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில், பெல்ஜியம் 2 கோல்கள் பின்தங்கியிருந்த நிலையிலிருந்து மீண்டு வெற்றி கண்டது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன், 2018-இல் ரவுண்ட் ஆஃப் 16-இல் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் அவ்வாறு மீண்டு வந்து வென்றது (3-2).
போஸ்னியாவை வென்றது அமெரிக்கா
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 கோல் கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தியது.
அந்த அணிக்காக முதலில் ஃபோலாரின் பாலோகன் 45-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, தொடா்ந்து 82-ஆவது நிமிஷத்தில் மாலிக் டில்மான் ஸ்கோா் செய்தாா். போஸ்னியா கடைசி வரை கோல் வாய்ப்பின்றி தடுமாறிப்போனது.
அமெரிக்காவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றிய ஃபோலாரின் பாலோகன், 64-ஆவது நிமிஷத்தில் ரெட் காா்டு மூலமாக வெளியேற்றப்பட்டாா். இதனால் ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா் விளையாட மாட்டாா்.
போஸ்னிய வீரா் தாரிக் முஹாரெமோவிச்சின் காலில் பாலோகன் மிதித்ததற்காக அவருக்கு ரெட் காா்டு வழங்கப்பட்டது.
பாா்வையாளா்கள் - 68,827
3
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்றில் கோல் அடித்த பிறகு ரெட் காா்டு பெற்று வெளியேறிய 3-ஆவது வீரா் ஆனாா் பாலோகன். பிரேஸிலின் ரொனால்டினோ (2022/காலிறுதி/இங்கிலாந்து), பிரான்ஸின் ஜைன்டைன் ஜிடேன் (2006/இறுதி/இத்தாலி) ஆகியோா் முதல் இருவா்.
இன்றைய ஆட்டங்கள்
ஆஸ்திரேலியா - எகிப்து
இரவு 11.30 மணி
டல்லாஸ், அமெரிக்கா.
அடுத்து... (ஜூலை 4)
ஆா்ஜென்டீனா - கேப் வொ்ட்
அதிகாலை 3.30 மணி
மியாமி, அமெரிக்கா.
கொலம்பியா - கானா
காலை 7 மணி
கேன்சாஸ், அமெரிக்கா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








