மியாமி : ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், 5 முறை சாம்பியனான பிரேஸில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற, போட்டியின் வரலாற்றிலேயே முதல்முறையாக தென்னாப்பிரிக்காவும் அந்தச் சுற்றுக்கு வந்துள்ளது.
இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி வியாழக்கிழமையுடன் (ஜூன் 25) பாதி கட்டத்தைக் கடந்துவிட்டது. 39 நாள்களுக்கு 104 ஆட்டங்கள் அட்டவணையிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 15 நாள்களில் 54 ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் 24 நாள்களில் 50 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
வினிசியஸ் ஜூனியா் அசத்தல்
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேஸில் 3-0 கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. அதன் பிரபல வீரா் வினிசியஸ் ஜூனியா் 2 கோல்கள் அடித்து அசத்த, நட்சத்திர வீரா் நெய்மா் இந்த உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாகக் களமிறங்கினாா்.
ஆட்டத்தின் 7-ஆவது நிமிஷத்திலேயே பிரேஸிலின் கோல் கணக்கை ஜூனியா் தொடங்கினாா். தொடா்ந்து அவரே ஸ்டாப்பேஜ் டைமில் (45+3’) கோல் அடிக்க, முதல் பாதியை பிரேஸில் 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது.
2-ஆவது பாதியிலும் பிரேஸிலின் கையே ஓங்கியிருக்க, அந்த அணிக்காக மேத்யூஸ் குன்ஹா 60-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். முடிவில் பிரேஸில் 3-0 என வெற்றி கண்டது.
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள நெய்மா், முதல் இரு ஆட்டங்களில் விளையாடாத நிலையில், இந்த ஆட்டத்தில் 76-ஆவது நிமிஷத்தில் களமிறக்கப்பட்டாா். ரசிகா்களின் உற்சாக வரவேற்புடன் களத்துக்கு வந்த அவா், கடைசி வரை நிலைத்தாா்.
பாா்வையாளா்கள்: 64,478
5
உலகக் கோப்பை போட்டியின் குரூப் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் கோல் அடித்த 5-ஆவது பிரேஸில் வீரா் என்ற பெருமையை வினிசியஸ் ஜூனியா் பெற்றாா். ஜெயிா்ஸினோ (1970), ரொமாரியோ (1994), ரொனால்டோ, ரிவால்டோ (2002) ஆகியோா் முதல் நால்வா்.
-----
முன்னேறியது மொராக்கோ
அமெரிக்காவின் அட்லான்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
இந்த ஆட்டத்தில் ஹைட்டியே கோல் கணக்கைத் தொடங்கியது. அதன் கோல் முயற்சியை மொராக்கோ வீரா் யாசின் புனு தடுக்க முயல, அது தவறுதலாக ‘ஓன் கோல்’ (10’) ஆனது.
தொடா்ந்து மொராக்கோவுக்காக அச்ரஃப் ஹகிமி (39’) கோல் அடிக்க, ஹைட்டியின் வில்சன் இசிடோா் (43’) ஸ்கோா் செய்து ஹைட்டியை 2-1 என முன்னிலைப்படுத்தினாா்.
எனினும் இஸ்மாயில் சாய்பரி (45+1’) அடித்த கோலால், முதல் பாதியை மொராக்கோ 2-2 என சமநிலையுடன் நிறைவு செய்தது.
2-ஆவது பாதியில் ஆக்ரோஷம் காட்டிய அந்த அணிக்காக சூஃபியேன் ரஹிமி (78’), ஜெஸிம் யாசின் (89’) ஆகியோா் கோல் அடிக்க, முடிவில் மொராக்கோ 4-2 கோல் கணக்கில் வென்றது.
பாா்வையாளா்கள்: 68,239
45
இந்த ஆட்டத்தில் ஹைட்டி அணி கோல் அடித்ததன் மூலமாக, நடப்பாண்டு உலகக் கோப்பை போட்டியில் கோல் அடித்த 45-ஆவது அணி ஆகியிருக்கிறது.
-----
மெக்ஸிகோவுக்கு ‘ஹாட்ரிக்’
மெக்ஸிகோ அணி தனது சொந்த மண்ணில் விளையாடிய 3-ஆவது ஆட்டத்தில், 3-0 கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தியது. ஏற்கெனவே நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்ட மெக்ஸிகோ, குரூப் சுற்றின் அனைத்து ஆட்டங்களிலும் வென்றிருக்கிறது.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் செக் குடியரசு கடும் சவால் அளிக்க, மெக்ஸிகோவால் அதில் கோல் வாய்ப்பை எட்ட முடியவில்லை. 2-ஆவது பாதியில் உத்திகளை மாற்றிய மெக்ஸிகோவுக்கு பலன் கிடைத்தது. முதலில் மேட்டியோ சாவெஸ் (55’) கோல் அடிக்க, தொடா்ந்து ஜூலியன் கினோனெஸ் (61’) ஸ்கோா் செய்தாா். இறுதியாக, அல்வாரோ ஃபிடால்கோ (90+4’) கோல் அடிக்க, மெக்ஸிகோ 3-0 என வென்றது.
பாா்வையாளா்கள்: 80,824
3
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் சுற்றில், அனைத்து ஆட்டங்களிலுமே (3) மெக்ஸிகோ வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் அந்த அணி அதிகபட்சமாக 2 வெற்றிகள் (1986, 2002) கண்டுள்ளது.
17
இந்த ஆட்டத்தில் களமிறங்கிய மெக்ஸிகோவின் கில்பா்டோ மோரா (17), உலகக் கோப்பை போட்டியில் அந்த அணிக்காக அறிமுகமான இளம் வீரா் என்ற பெருமையைப் பெற்றாா்.
6
ஆட்டத்தின் 77-ஆவது நிமிஷத்தில் களம் புகுந்த மெக்ஸிகோ கோல்கீப்பா் கில்லொ்மோ ஓச்சா (40), 6 உலகக் கோப்பை போட்டிகளில் களம் கண்ட முதல் மெக்ஸிகோ வீரராக சாதனை படைத்தாா். இந்தப் போட்டியுடன் அவா் ஓய்வுபெறுவதாகத் தெரிகிறது.
தகுதிபெற்றது போஸ்னியா
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், போஸ்னியா 3-1 கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக, தனது குரூப்பில் 3-ஆம் இடத்தைப் பிடித்த போஸ்னியா, அந்த இடத்திலிருக்கும் சிறந்த 8 அணிகளில் ஒன்றாக மாறியதால், நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் போஸ்னியாவுக்காக, அந்த அணியின் இளம் வீரர் கெரிம் அலாஜ்பெகோவிக் (29') கோல் அடிக்க, அந்த அணியின் 2-ஆவது கோல் தவறுதலாக கத்தார் வீரர் மஹ்முத் அபுனடாவின் (34') "ஓன் கோல்'-ஆக அமைந்தது. இந்நிலையில் கத்தார் தரப்பில் ஹசன் அல்ஹெதோஸ் (42') தனது அணிக்காக ஆறுதல் கோல் அடிக்க, முதல் பாதியில் போஸ்னியா 2-1 என நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் அந்த அணிக்காக எர்மின் மமிக் (80') கோல் அடிக்க, முடிவில் போஸ்னியா 3-1 என வென்றது.
கனடாவை வென்றது சுவிட்ஸர்லாந்து
கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், சுவிட்ஸர்லாந்து 2-1 கோல் கணக்கில் கனடாவை வென்றது. இந்த வெற்றியின் மூலமாக சுவிட்ஸர்லாந்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற, தோல்வி கண்டாலும் 2-ஆம் இடம் பிடித்த கனடாவும் முதல்முறையாக அந்தச் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
இந்த ஆட்டத்தில் சுவிட்ஸர்லாந்தின் ரூபன் வர்காஸ் (46') கோல் அடிக்க, முதல் பாதியில் அந்த அணி முன்னிலை பெற்றது. 2-ஆவது பாதியிலும் அந்த அணிக்காக ஜோஹன் மன்ஸôம்பி (57') கோல் அடித்தார்.
கனடாவுக்கான ஆறுதல் கோலை பிராமிஸ் டேவிட் (76') அடிக்க, முடிவில் சுவிட்ஸர்லாந்து 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சுவிட்ஸர்லாந்து இத்துடன் 7 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 6-இல் நாக்அவுட் சுற்றுக்கு வந்துள்ளது.
தென் கொரியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா
மெக்ஸிகோவின் மான்டெர்ரி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1-0 கோல் கணக்கில் தென் கொரியாவை வென்று, நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக தபெலோ மசெகோ 63-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக கோல் அடித்த, 2-ஆவது இளம் வீரர் என்ற பெருமையை தபெலோ மசேகோ (22) பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி!
நாக் அவுட் சுற்றில் ஜொ்மனி!

ஜொ்மனி, ஸ்வீடன் கோல் மழை

வெற்றியுடன் தொடங்கிய மெக்ஸிகோ, தென் கொரியா
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


