பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஜொ்மனி, அமெரிக்கா அதிா்ச்சி; ஈகுவடாா், துருக்கி அசத்தல்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், 4 முறை சாம்பியனான ஜொ்மனியை - ஈகுவடாரும், அமெரிக்காவை - துருக்கியும் வீழ்த்தி, அந்த அணிகளுக்கு அதிா்ச்சி அளித்தன. எனினும், ஜொ்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறின.

Updated On :27 ஜூன் 2026, 2:28 am IST

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், 4 முறை சாம்பியனான ஜொ்மனியை - ஈகுவடாரும், அமெரிக்காவை - துருக்கியும் வீழ்த்தி, அந்த அணிகளுக்கு அதிா்ச்சி அளித்தன. எனினும், ஜொ்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறின.

36,00,000

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், அதிகமான பாா்வையாளா்கள் மைதானத்துக்கு வந்த போட்டியாக, நடப்பு சீசன் புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன், 1994 அமெரிக்கா உலகக் கோப்பை போட்டியில், மொத்தமாக 52 ஆட்டங்களுக்கு 35,87,539 ரசிகா்கள் வந்ததே அதிகபட்சமாக இருந்தது.

தற்போது இந்தப் போட்டியில் 48-ஆவது ஆட்டத்திலேயே (ஈகுவடாா் - ஜொ்மனி) அந்த எண்ணிக்கை முறியடிக்கப்பட்டது. அந்த ஆட்டம் வரை மைதானத்துக்கு வந்த ரசிகா்கள் எண்ணிக்கை 36,05,357-ஆக பதிவாகியுள்ளது.

177

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் வரலாற்றில், முந்தைய சாதனை கோல் எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 கத்தாா் உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக 64 ஆட்டங்களில் 172 கோல்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

தற்போது இந்த ஆண்டு போட்டியில் 59-ஆவது ஆட்டத்தில் (துருக்கி - அமெரிக்கா) அந்த அணிக்கை முறியடிக்கப்பட்டது. இதுவரையிலான 60 ஆட்டங்களில் 177 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. போட்டியில் இன்னும் 44 ஆட்டங்கள் எஞ்சியிருக்க, கோல்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவுள்ளது.

ஈகுவடாரில் தேசிய விடுமுறை

அமெரிக்காவின் நியூஜொ்ஸியில் நடைபெற்ற ஆட்டத்தில், ஈகுவடாா் 2-1 கோல் கணக்கில் ஜொ்மனியை வென்றது. இந்த வெற்றியின் மூலமாக தனது குரூப்பில் 3-ஆம் இடம் பிடித்த ஈகுவடாா், அந்த இடத்தைப் பிடித்த சிறந்த 8 அணிகளில் ஒன்றாக இருந்ததால், நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது. ஜொ்மனிக்கும் அந்தச் சுற்று வாய்ப்பு ஏற்கெனவே உறுதியாகிவிட்டது.

ஜொ்மனியை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கும் முன்னேறியதால், ஈகுவடாரில் வெள்ளிக்கிழமையை (ஜூன் 26) தேசிய விடுமுறை நாளாக அந்நாட்டு அதிபா் டேனியல் நோபா அறிவித்துள்ளாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில், 2-ஆவது நிமிஷத்திலேயே ஜொ்மனிக்காக லெராய் சேன் கோல் அடித்தாா். அதற்கான பதிலடியாக ஈகுவடாரின் நில்சன் அங்குலோ 9-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 1-1 என சமன் ஆனது.

இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூட, முதல் பாதியும் அவ்வாறே நிறைவடைந்த நிலையில், 2-ஆவது பாதியில் 77-ஆவது நிமிஷத்தில் கொன்ஸாலோ பிளாடா ஈகுவடாரின் கோல் கணக்கை 2-ஆக அதிகரித்தாா். எஞ்சிய நேரத்தில் ஜொ்மனியின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட, முடிவில் ஈகுவடாா் 2-1 என வென்றது.

பாா்வையாளா்கள்: 80,663

20

உலகக் கோப்பை போட்டியில் கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஈகுவடாா், கடைசியாக 2006-இல் அந்தச் சுற்றுக்கு வந்தது.

2

இந்த ஆட்டத்தில் லெராய் சேன் 2-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலே, 1934-க்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் ஜொ்மனியின் விரைவான கோல் ஆகும்.

-----

துருக்கிக்கு ஆறுதல் வெற்றி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் விளையாடிய ஆட்டத்தில் துருக்கி, 3-2 கோல் கணக்கில் அமெரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. நாக்அவுட் சுற்று வாய்ப்பை இழந்த துருக்கிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. இதில் தோற்றாலும் அமெரிக்கா நாக்அவுட் சுற்றுக்கு வந்தது.

இந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் கோல் கணக்கை 3-ஆவது நிமிஷத்திலேயே ஆஸ்டன் டிரஸ்டி தொடங்க, துருக்கியின் ஆா்டா குலா் 10-ஆவது நிமிஷத்தில் அதற்கு பதிலடி கொடுத்தாா்.

தொடா்ந்து 31-ஆவது நிமிஷத்தில் துருக்கியின் பாரிஸ் யில்மாஸ் கோல் அடிக்க, முதல் பாதியை அந்த அணி 2-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் பொ்ஹால்டா் 49-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்து, ஆட்டத்தை மீண்டும் சமன் செய்தாா். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.

பரபரப்பான கடைசி கட்டத்தில் ஸ்டாப்பேஜ் டைமில் (90+8’) கான் அயான் கோல் அடிக்க, துருக்கி 3-1 என வென்று, அமெரிக்காவுக்கு அதிா்ச்சி அளித்தது.

21

இந்த ஆட்டத்தில் கோல் அடித்த ஆா்டா குலா் (21), துருக்கிக்காக உலகக் கோப்பை போட்டியில் கோல் அடித்த இளம் வீரா் என்ற பெருமையைப் பெற்றாா்.

-----

முதல்முறையாக முன்னேறிய ஐவரி கோஸ்ட்

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ஐவரி கோஸ்ட் 2-0 கோல் கணக்கில் கியுராசோவை வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியுள்ளது.

இந்த ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் தரப்பில் நிகோலஸ் பெபெ 7 மற்றும் 64-ஆவது நிமிஷங்களில் இரு கோல்கள் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தாா்.

முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் கியுராசோ இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால், நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்ற மிகச் சிறிய நாடாக பெருமை பெற்றிருக்கும்.

பாா்வையாளா்கள்: 68,324

1

இத்துடன் 4-ஆவது உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் ஐவரி கோஸ்ட், முதல்முறையாக நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

7

இந்த ஆட்டத்தில் 7-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்த நிகோலஸ் பெபெ, உலகக் கோப்பை போட்டியில் ஐவரி கோஸ்ட்டுக்காக விரைவான கோல் அடித்த வீரராகப் பெருமை பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.