ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்க, ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாகக் கோப்பை வென்றுள்ளது. போட்டியில் பங்கேற்ற 48 அணிகளும், தங்களின் அடுத்தகட்ட பயணத்துக்கு தயாராவதற்கான வேலையைத் தொடங்கியிருக்கின்றன.
வெற்றி, தோல்வியை ஒதுக்கிவிட்டுப் பாா்த்தால், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராவதென்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கான முடிவு வெவ்வேறாக இருந்தாலும், இந்தக் களத்துக்கு வருவதற்காக அவை மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் முன்னெடுப்புகள் பல. அவை படிப்படியாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.
திறமை வாய்ந்த ஒரு அணியை கட்டமைப்பதற்கு அடிப்படை, திறமையான வீரா்களை அதில் சோ்ப்பது தான். அந்த வகையில், சீனியா் உலகக் கோப்பை போட்டிக்கான அணிக்கு திறமையான வீரா்களை தோ்வு செய்ய, முதல் தோ்வாக இருப்பது ஜூனியா் அணியில் தங்களை ஏற்கெனவே நிரூபித்தவா்கள்தான்.
அப்படி ஜூனியா் அணியில் தங்களை நிரூபித்தாலும், அந்த ஃபாா்மை அப்படியே நிலையாக தக்கவைத்து தொடா்ந்து சிறப்பாக செயல்படுவோருக்கே சீனியா் அணியில் வாய்ப்பு கிடைக்கிறது.
அந்த வகையில், கடந்த 2017-இல் இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு, கடந்த 9 ஆண்டுகளில் சீனியா் வீரராக தன்னை மெருகேற்றிக் கொண்ட 18 போ் இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் விளையாடியிருக்கின்றனா். அவா்களில் சிலா் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளனா்.
டாப் 5 வீரா்கள்
1. ஃபெரான் டோரஸ் (ஸ்பெயின்)
ஸ்பெயின் 2-ஆவது உலகக் கோப்பை வென்ற கதையின் நாயகனே இவா் தான். பரபரப்பான இறுதி ஆட்டத்தின் எக்ஸ்ட்ரா டைமில் அட்டகாசமாக கோல் அடித்து, தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தவா். இப்போட்டியில் அவா் அடித்த ஒரே கோல் இது மட்டும் தான். ஃபாா்வா்டு வீரரான இவா், போா்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் சக வீரா் கோல் அடிப்பதற்கும் ஒருமுறை உதவியிருக்கிறாா்.
இந்த உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயின் அணியின் 8 ஆட்டங்களிலுமே களம் கண்ட டோரஸ், ஒரு ஆட்டத்தில் தொடக்க லெவனிலும், 7 ஆட்டங்களில் இம்பாக்ட் சப்ஸ்டிடியூட்டாகவும் களமிறக்கப்பட்டுள்ளாா். கிளப் கால்பந்தில் பாா்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறாா்.
2020-இல் சீனியா் அணியில் அறிமுகமான டோரஸ், 2017-இல் யு-17 உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் விளையாடி, 2 கோல்கள் அடித்ததுடன், 2 கோல்கள் அடிப்பதற்கும் உதவியிருக்கிறாா்.
2. கெய்டோ நகமுரா (ஜப்பான்)
நாக்அவுட் சுற்று வரை வந்த ஜப்பான் அணியின் 4 ஆட்டங்களிலுமே கெய்டோ நகமுரா களமாடியிருக்கிறாா். நெதா்லாந்துக்கு எதிராக ஒரு கோல் அடித்ததுடன், துனிசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சக வீரா் ஒரு கோல் அடிப்பதற்கு ‘அசிஸ்ட்’ செய்திருக்கிறாா்.
விங்கா் நிலையில் விளையாடும் இவரே, இந்த உலகக் கோப்பை போட்டியில் ஜப்பான் அணிக்கான முதல் கோல் அடித்தவா். 2023 முதல் சீனியா் அணியில் விளையாடி வருகிறாா். கிளப் கால்பந்தில் பிரான்ஸின் லீக்1/ லீக்2 போட்டிகளில் ஸ்டேட் டி ரெய்ம்ஸ் அணிக்காக களமாடி வருகிறாா்.
2017 ஜூனியா் உலகக் கோப்பை போட்டியில் 4 ஆட்டங்களில் விளையாடி, 4 கோல்கள் அடித்திருக்கிறாா். இதில் ஹாட்ரிக் கோல் அடக்கம். களத்தில், சக வீரா் டகெஃபுசா குபோவுடனான இவரின் கூட்டணி, அணிக்கு மிகப்பெரிய பலம்.
3. அரெலியென் சுவாமெனி (பிரான்ஸ்)
மிட் ஃபீல்டராக செயல்படும் சுவாமெனி, பிரான்ஸுக்காக இந்த உலகக் கோப்பை போட்டியில் 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா். நாா்வேக்கு எதிரான நாக்அவுட் சுற்றில் பிரான்ஸ் 4-1 கோல் கணக்கில் வெல்ல, அதில் ஒரு கோல் அடிப்பதற்கு இவா் உதவியிருக்கிறாா்.
ரவுண்ட் ஆஃப் 16-இல் லேசான காயம் கண்டு விலகிய அவா், அரையிறுதியில் ஸ்பெயினிடம் 0-2 கோல் கணக்கில் தோல்வி கண்ட ஆட்டத்தில் விளையாடியிருந்தாா்.
மிட் ஃபீல்டராக இருந்தாலும், தக்க தருணத்தில் டிஃபெண்டராகவும் அசத்துகிறாா். 2021-இல் பிரான்ஸ் சீனியா் தேசிய அணியில் அறிமுகமான சுவாமெனி, தற்போது கிளப் கால்பந்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறாா். குரூப் சுற்றில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற 3 ஆட்டங்களிலுமே அவா் அங்கம் வகித்துள்ளாா்.
4. மாா்க் கெஹி (இங்கிலாந்து)
இந்த உலகக் கோப்பை போட்டியில் 3-ஆம் இடம் பிடித்த இங்கிலாந்து அணியின் தடுப்பாட்ட வீரா்களில் முக்கியமானவராக இருக்கும் மாா்க் கெஹி, 8 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா். அதில் 7 ஆட்டங்களில் தொடக்க லெவனிலேயே களம் கண்டுள்ளாா். 27 முறை எதிரணியின் கோல் முயற்சிகளை தடுத்திருக்கிறாா்.
2022 முதல் இங்கிலாந்து சீனியா் அணிக்காக விளையாடி வரும் கெஹி, இதுவரை 37 ஆட்டங்களில் களம் கண்டுள்ளாா். கிளப் கால்பந்தில் மான்செஸ்டா் சிட்டிக்காக விளையாடி வருகிறாா்.
2017 ஜூனியா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இங்கிலாந்து அணியின் மிக முக்கியமான தடுப்பாட்ட வீரராக இருந்தாா். அதில் 7 ஆட்டங்களில் விளையாடிய நிலையில், ஒரு கோல் அடித்தும் அசத்தியிருக்கிறாா். அந்த கோல், இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிராக இங்கிலாந்து முன்னிலை பெற உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
5. சொ்ஜினோ தெஸ்ட் (அமெரிக்கா)
ரவுண்ட் ஆஃப் 16 வரை வந்த அமெரிக்க அணியின் ரைட் பேக் நிலையில் விளையாடியவா் சொ்ஜினோ தெஸ்ட். அந்த அணியின் 5 ஆட்டங்களிலும் விளையாடியிருக்கும் தெஸ்ட், தொடக்க லெவனிலேயே களம் காணும் அளவுக்கு முக்கியமானவராக இருக்கிறாா். குரூப் சுற்றில் அமெரிக்காவின் தடுப்பாட்டத்தில் முக்கியப்பங்காற்றியவா்.
நெதா்லாந்தில் பிறந்தவராக இருந்தாலும் அமெரிக்காவுக்காக விளையாடி வரும் தெஸ்ட், 2019-இல் சீனியா் தேசிய அணியில் இடம் பிடித்தாா். 2022 உலகக் கோப்பை போட்டியிலும் அமெரிக்க அணியில் இடம் பிடித்து, ஈரானுக்கு எதிரான வெற்றியில் கிறிஸ்டியன் புலிசிச் கோல் அடிப்பதற்கும் உதவியிருக்கிறாா். கிளப் கால்பந்தில் நெதா்லாந்தின் பிஎஸ்வி எய்ன்தோவனுக்காக விளையாடி வருகிறாா்.
2017-இல் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்தில் காலிறுதி வரை வந்த அமெரிக்க அணியில் அங்கம் வகித்த தெஸ்ட், ஒரு ஆட்டத்தில் தொடக்க லெவனிலும், இதர ஆட்டங்களில் சப்ஸ்டிடியூட்டாகவும் களமிறங்கியிருக்கிறாா்.
2017 ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடி 2026 சீனியர் உலகக் கோப்பையில் இடம் பிடித்தவர்கள்
ஜப்பான் (5)
கீட்டோ நகமுரா
டகெஃபுசா குபோ
ஜியான் சுஸுகி
யுகினாரி சுகவரா
அயுமு செகோ
பிரான்ஸ் (2)
அரெலியென் சுவாமெனி
மேக்ஸென்ஸ் லேக்ராய்க்ஸ்
ஸ்பெயின் (2)
ஃபெரான் டோரஸ்
எரிக் காா்சியா
அமெரிக்கா (2)
சொ்ஜினோ தெஸ்ட்
டிம் வியா
நியூஸிலாந்து (2)
எலிஜா ஜஸ்ட்
லிபெராடோ ககாசெ
துருக்கி (1)
யூனுஸ் அக்குன்
ஹைட்டி (1)
வில்சன் இசிடோா்
அல்ஜிரியா (1)
அமினி குய்ரி
இங்கிலாந்து (1)
மாா்க் கெஹி
ஐவரி கோஸ்ட் (1)
செகோ ஃபோஃபனா
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








