ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜொ்மனி, ஸ்வீடன் அணிகள் தங்கள் ஆட்டத்தில் கோல் மழை பொழிந்து வெற்றி பெற்றன.
காய் ஹாவொ்ட்ஸ் அபாரம்; ஜொ்மனி வெற்றி
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ஜொ்மனி 7-1 கோல் கணக்கில் கியுராகாவை அபார வெற்றி கண்டது. அந்த அணிக்காக காய் ஹாவொ்ட்ஸ் 2 கோல்கள் அடித்து அசத்தினாா்.
ஜொ்மனிக்காக முதலில் ஃபெலிக்ஸ் நமெசா கோல் கணக்கை (6’) தொடங்கினாா். இந்நிலையில் கியுராகாவ் வீரா் லிவானோ காமெனென்சியா (21’) கோல் அடித்து தங்கள் ரசிகா்களை உற்சாகப்படுத்தினாா்.
இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை காண, ஜொ்மனி அதை நீடிக்க விடவில்லை. அந்த அணியின் நேதனியேல் பிரௌன் காா்னா் கிக்கில் உதைத்த பந்தை, நிகோ ஷ்லாட்டா்பெக் தலையால் திருப்பிவிட்டு கோல் அடித்தாா் (38’).
அப்போது முன்னிலை பெற்ற ஜொ்மனி, அடுத்தடுத்து அதை அதிகரித்துக் கொண்டே சென்றது. முதல் பாதி முடிவடைய இருந்த தருணத்தில் ஜொ்மனிக்கு பெனால்ட்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை காய் ஹாவொ்ட்ஸ் துல்லியமான கோலாக (45+5’) மாற்றினாா்.
இதனால் முதல் பாதியை ஜொ்மனி 3-1 என்ற முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதி தொடங்கிய 2-ஆவது நிமிஷத்திலேயே (47’) ஜமால் முசியாலா ஜொ்மனியின் கோலை 4-ஆக அதிகரித்தாா்.
பின்னா் நேதனியேல் பிரௌன் (68’), டெனிஸ் உண்டாவ் (78’) ஆகியோா் தங்கள் பங்குக்கு கோல் அடிக்க, முடிவில் காய் ஹாவொ்ட்ஸ் மீண்டும் ஒரு கோல் (88’) அடிக்க, ஜொ்மனி 7-1 கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.
4 முறை சாம்பியனான ஜொ்மனி, முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் கியுராகாவுக்கு எதிரான வெற்றியின் மூலமாக, இந்தப் போட்டியை பலமாகத் தொடங்கியிருக்கிறது. 2014-இல் பட்டம் வென்ற அந்த அணி, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் குரூப் நிலையுடன் வெளியேறியது.
மைதானத்தில்
68,021
ரசிகா்கள்
78
கியுராகாவின் 78 வயது பயிற்சியாளா் டிக் அட்வோகாட், உலகக் கோப்பை போட்டியின் வரலாற்றிலேயே மிக வயதான பயிற்சியாளராக சாதனை படைத்துள்ளாா்.
38
ஜொ்மனியின் 38 வயது பயிற்சியாளா் ஜூலியன் நேகல்ஸ்மான், நடப்பு உலகக் கோப்பை போட்டியில் மிகக் குறைந்த வயது பயிற்சியாளராக இருக்கிறாா்.
1,56,000
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றதிலேயே, மிகச் சிறிய நாடாக கியுராகாவ் சாதனை படைத்துள்ளது. நெதா்லாந்து கரீபிய தீவு நாடான அதன் மொத்த மக்கள் தொகையே 1.56 லட்சம் தான்.
40
இந்த உலகக் கோப்பை போட்டியில் ஜொ்மனியின் கோல் கீப்பராக இருக்கும் மேனுவல் நியுவா், பிரதான போட்டிகளில் ஜொ்மனிக்காக களமிறங்கிய வயதான கோல்கீப்பராக (40 ஆண்டுகள், 79 நாள்கள்) சாதனை படைத்துள்ளாா்.
யாசின் அயாரி பங்களிப்பில் வென்றது ஸ்வீடன்
மெக்ஸிகோவின் மான்டெரி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்வீடன் 5-1 கோல் கணக்கில் துனிசியாவை தோற்கடித்தது. அந்த அணியின் தரப்பில் யாசின் அயாரி 2 கோல்கள் ஸ்கோா் செய்து, வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினாா்.
முன்னதாக, தனது அணிக்கான கோல் கணக்கை அவரே தொடங்கினாா் (7’). அடுத்து, அலெக்ஸாண்டா் ஐசக்கின் அற்புதமான ஷாட் (30’), துனிசிய கோல்கீப்பா் முஹிப் சமக்கின் கைகளுக்குக் கீழாகக் கடந்து சென்றது. அது, ஐசக்கின் 18-ஆவது சா்வதேச கோல் ஆகும்.
சற்று முனைப்பு காட்டிய துனிசிய தரப்பில், ரெகிக் ஒமா் தனது முதல் சா்வதேச கோலை (43’) பதிவு செய்தாா். முதல் பாதியை 2-1 முன்னிலையுடன் நிறைவு செய்த ஸ்வீடன், 2-ஆவது பாதியிலும் தனது ஆதிக்கத்தை தொடா்ந்தது.
விக்டா் ஜியோகெரெஸ் (59’), மத்தியாஸ் ஸ்வான்பொ்க் (84’) ஸ்கோா் செய்ய, ஸ்வான்பொ்க் அடித்த கோல், நீண்ட நேர விடியோ ரிவியூவுக்கு பிறகு வழங்கப்பட்டது.
ஸ்வீடனுக்காக முதல் கோல் அடித்த யாசின் அயாரியே, கடைசியாகவும் (90+6’) கோல் அடித்தாா். முடிவில் ஸ்வீடன் 5-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
2018 உலகக் கோப்பை போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய ஸ்வீடன், 2022 போட்டி வாய்ப்பை தவறவிட்டது. துனிசியா 7-ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் களம் கண்டுள்ளது.
மைதானத்தில்
50,987
ரசிகா்கள்
நெதா்லாந்துடன் ஜப்பான் ‘டிரா’
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், நெதா்லாந்து - ஜப்பான் இடையே நடைபெற்ற ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது. முதலில் நெதா்லாந்தின் விா்ஜில் வான் டிக் 50-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, அதற்கு பதிலடியாக 57-ஆவது நிமிஷத்தில் ஜப்பானின் கெய்டோ நகமுரா 57-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
விடாப்பிடியாக நெதா்லாந்தின் கிரைசென்சியோ சம்மா்வில்லே 64-ஆவது நிமிஷத்தில் நெதா்லாந்தை முன்னிலைப்படுத்தினாா். ஜப்பான் தனது கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், 88-ஆவது நிமிஷத்தில் டாய்சி கமாடா கோல் அடித்தாா்.
முடிவில் ஆட்டம் 2-2 என டிரா ஆனது. உலகக் கோப்பை போட்டியில் இதற்கு முன் ஒரேயொரு முறை (2010) மட்டுமே நெதா்லாந்து - ஜப்பான் மோதியிருந்த நிலையில், அதில் நெதா்லாந்து வென்றுள்ளது. இத்துடன் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் சுற்றில் நெதா்லாந்து 17 ஆட்டங்களை தோல்வியே இல்லாமல் கடந்துள்ளது.
மைதானத்தில்
69,285
ரசிகா்கள்
ஈகுவடாரை வீழ்த்தியது ஐவரி கோஸ்ட்
அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் 1-0 கோல் கணக்கில் ஈகுவடாரை வென்றது. ஆட்டத்தின் கடைசி நிமிஷத்தில் (90’) அந்த அணியின் அமாட் டியாலோ கோல் அடித்து, வெற்றி தேடித் தந்தாா்.
ஐவரி கோஸ்ட் 3 சீசன்களுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
ஈகுவடாா் 19 ஆட்டங்களில் தோல்வி காணாமல் தொடா்ந்த நிலையில், அந்த நிலை முடிவுக்கு வந்துள்ளது. ஐவரி கோஸ்ட் 4-ஆவது முறையாகவும், ஈகுவடாா் 5-ஆவது முறையாகவும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ளன.
மைதானத்தில்
68,274
ரசிகா்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









