
பெர்த் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியினால் எங்களுக்கு எந்தவொரு பயமும் இல்லை என ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
பெர்த் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. மார்னஸ் லபுஷேனை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் சேர்க்கக் கூடாது எனவும் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இரண்டாவது போட்டியின் பிளேயிங் லெவனில் வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
எங்களுக்கு பயமில்லை
இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ள நிலையில், பெர்த்தில் ஏற்பட்ட தோல்வியால் ஆஸ்திரேலிய அணிக்கு எந்தவொரு பயமும் இல்லை எனவும், கைவசம் திட்டங்கள் இருக்கின்றன எனவும் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி வீரர்களித்தில் கண்டிப்பாக எந்தவொரு அச்சமும் இல்லை. தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடுகள் குறித்து கருத்துகள் இருக்கப் போகின்றன. இனிவரும் போட்டிகளில் ஒவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒரு போட்டியில் தோற்றுவிட்டோம். ஒரு அணியாக நாங்கள் நிறைய திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளோம். இந்திய அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கும் தனித்தனி திட்டம் வைத்துள்ளோம். அதனை, நான் இப்போது கூற மாட்டேன். ஆனால், எங்களிடம் நல்ல திட்டங்கள் உள்ளன என்றார்.
இதையும் படிக்க: ஐசிசியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா!
ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்காட் போலாண்ட் 35 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.