
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சிக்கிமுக்கு எதிரான போட்டியில் பரோடா அணி டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் 111-வது போட்டி இந்தூர் எமரால்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பரோடா - சிக்கிம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பரோடா அணி கேப்டன் க்ருணால் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, துவக்கம் முதலே அதிரடி காட்டிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஷஸ்வத் ராவத், அபிமன்யுசிங் இருவரும் 5.1 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தனர்.
அபிமன்யு சிங் 17 பந்துகளில் 53 ரன்கள்(4 பவுண்டரி, 5 சிக்ஸர்) எடுத்து வெளியேற, ஷஸ்வத் ராவத் 16 பந்துகளில் 43 ரன்கள் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பானு பனியா சிக்கிமின் பந்து வீச்சை சிதறடித்தார். அவர் 51 பந்துகளில் 134 ரன்கள்(5 பவுண்டரி, 15 சிக்ஸர்) எடுத்தார். அடுத்து வந்தவர்களும் அதே அதிரடியைத் தொடர்ந்ததால் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. முடிவில், சிவாலிக் சர்மா 17 பந்துகளில் 55 ரன்கள் (3 பவுண்டரி, 6 சிக்ஸர்), விக்கெட் கீப்பர் விஷ்ணு சோலங்கி 16 பந்துகளில் 50 ரன்கள் (2 பவுண்டரி, 6 சிக்ஸர்) விளாசினர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பரோடா அணி 5 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது.
பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்த பரோடா அணி, 11 ஓவர்களில் 200 ரன்களையும், 18 ஓவர்களில் 300 ரன்களையும் கடந்தது.
அடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய சிக்கிம் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 86 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராபின் மன்குமார் 20 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர்த்து யாரும் 20 ரன்களைக்கூட தாண்டவில்லை.
இந்தப் போட்டியில் பரோடா அணி 5 புதிய சாதனைகளையும் படைத்துள்ளது. அந்த வகையில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரான ஜிம்பாப்வேயின் சாதனையை முறியடித்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச சிக்ஸர்கள்(37 சிக்ஸர்கள்) விளாசிய அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டில் 300 ரன்களைக் கடந்த முதல் இந்திய அணி என்ற சாதனையும் படைத்தது.
டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள்
பரோடா 349/5 vs சிக்கிம் - 2024
ஜிம்பாப்வே 344/4 vs காம்பியா - 2024
நேபாள் 314/3 vs மங்கோலியா - 2023
இந்தியா 297/6 vs வங்கதேசம் - 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.