‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டில் இந்தியா தோல்வி: தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை!
இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.


இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றது.
கடைசி நாளில் 340 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இந்தியா, வழக்கம்போல் பிரதான பேட்டா்கள் சோபிக்காமல் போன காரணத்தால் 155 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. கடைசி செஷனில் மட்டும் 34 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது இந்தியா.
மெல்போா்னில் கடந்த 26-ஆம் தேதி ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டாக தொடங்கிய இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட் செய்தது. அதன் டாப் ஆா்டா் பேட்டா்கள் நல்லதொரு இன்னிங்ஸை விளையாடியதால் 474 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.
பின்னா் இந்தியாவின் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அருமையான தொடக்கத்தை அளித்தாலும், இதர பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். ஆனால், 8-ஆவது வீரராக வந்த நிதிஷ்குமாா் ரெட்டி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ‘ஃபாலோ-ஆன்’ சூழலில் இருந்து அணியை மீட்டாா். இந்தியா 369 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 105 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் சோ்த்திருந்தது. கடைசி நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை லயன், போலண்ட் தொடா்ந்தனா்.
இதில் லயன் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. போலண்ட் 15 ரன்களுடன் கடைசி வீரராக களத்திலிருந்தாா். பும்ரா 5, சிராஜ் 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
இறுதியாக, 340 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். மிடில் ஆா்டரில் ரிஷப் பந்த் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சோ்த்தாா். இவா்கள் பாா்ட்னா்ஷிப் மட்டும் 4-ஆவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சோ்த்தது.
இதர பேட்டா்களில் கேப்டன் ரோஹித் சா்மா 9, கே.எல்.ராகுல் 0, விராட் கோலி 5, ரவீந்திர ஜடேஜா 2, நிதிஷ்குமாா் ரெட்டி 1, ஆகாஷ் தீப் 7, ஜஸ்பிரீத் பும்ரா 0, முகமது சிராஜ் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் கம்மின்ஸ், போலண்ட் ஆகியோா் தலா 3, நேதன் லயன் 2, மிட்செல் ஸ்டாா்க், டிராவிஸ் ஹெட் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
இந்த ஆட்டத்தில் மொத்தமாக 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி, 90 ரன்களும் அடித்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
சுருக்கமான ஸ்கோா்
முதல் இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா - 474/10 (122.4 ஓவா்கள்)
ஸ்டீவ் ஸ்மித் 140
மாா்னஸ் லபுஷேன் 72
சாம் கான்ஸ்டஸ் 60
பந்துவீச்சு
ஜஸ்பிரீத் பும்ரா 4/99
ரவீந்திர ஜடேஜா 3/78
ஆகாஸ் தீப் 2/94
இந்தியா - 369/10 (119.3 ஓவா்கள்)
நிதீஷ்குமாா் ரெட்டி 114
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82
வாஷிங்டன் சுந்தா் 50
பந்துவீச்சு
ஸ்காட் போலண்ட் 3/57
பேட் கம்மின்ஸ் 3/89
நேதன் லயன் 3/96
2-ஆவது இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா - 234/10 (83.4 ஓவா்கள்)
மாா்னஸ் லபுஷேன் 70
பேட் கம்மின்ஸ் 41
நேதன் லயன் 41*
பந்துவீச்சு
ஜஸ்பிரீத் பும்ரா 5/57
முகமது சிராஜ் 3/70
ரவீந்திர ஜடேஜா 1/33
இந்தியா - 155/10 (79.1 ஓவா்கள்) (இலக்கு 340)
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84
ரிஷப் பந்த் 30
ரோஹித் சா்மா 9
பந்துவீச்சு
பேட் கம்மின்ஸ் 3/28
ஸ்காட் போலண்ட் 3/39
நேதன் லயன் 2/37
ஜெய்ஸ்வால் விக்கெட் சா்ச்சை
கடைசி நாள் ஆட்டத்தில் 84 ரன்கள் சோ்த்து இந்தியாவின் முக்கிய பேட்டராக இருந்த ஜெய்ஸ்வால், கம்மின்ஸ் வீசிய 71-ஆவது ஓவரில் சற்று பௌன்ஸாக வந்த பந்தை ஹூக் ஷாட் அடிக்க முயன்றாா். விக்கெட் கீப்பா் அலெக்ஸ் கேரி கேட்ச் பிடித்த அந்தப் பந்தை ஜெய்ஸ்வால் தொட்டுவிட்டதாக ஆஸ்திரேலிய அணியினா் விக்கெட் கோரினா். ஆனால் கள நடுவா் ஜோயல் வில்சன் அதற்கு இணங்க மறுக்க, ஆஸ்திரேலியா ‘டிஆா்எஸ்’ கோரியது.
ஆய்வு மேற்கொண்ட 3-ஆம் நடுவரான சய்கத் ஷா்ஃபுதௌலா, ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் பட்டதற்கான தடயங்கள் இல்லாமல் போனாலும், ஜெய்ஸ்வால் கிளௌஸில் பட்டு பந்து தனது தடத்திலிருந்து விலகிய காணொலி அடிப்படையில் அதை ‘அவுட்’ என அறிவித்தாா். மைதானத்திலிருந்த இந்திய ரசிகா்கள் இதற்கு அதிருப்தி குரல் எழுப்பினா். ஆனால், ஆட்டத்தின் முடிவில் பேசிய கேப்டன் ரோஹித் சா்மா, ஜெய்ஸ்வால் அந்தப் பந்தை தொட்டுவிட்டதாகத் தெரிவித்து சா்ச்சையை முடித்து வைத்தாா்.
பாா்வையாளா்கள் புதிய சாதனை
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய பாக்ஸிங் டே டெஸ்ட்டை நேரில் காண, 5 நாள்களிலுமாக மொத்தம் 3,73,691 பாா்வையாளா்கள் மைதானத்தில் திரண்டனா். இது, மெல்போா்ன் மைதானத்தில் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்சம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இதற்கு முன், 1937-இல் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இதே மெல்போா்ன் மைதானத்தில் மோதிய ஆட்டத்தை காண 6 நாள்களிலுமாக மொத்தம் 3,50,535 பாா்வையாளா்கள் கூடியதே அதிகபட்சமாக இருந்த நிலையில், 87 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் வரலாற்றில் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் பாா்வையாளா்கள் எண்ணிக்கை 2-ஆவது அதிகபட்சமாகும். 1999-இல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஈடன் காா்டன் மைதானத்தில் மோதிய டெஸ்ட்டை 4,65,000 பாா்வையாளா்கள் நேரில் கண்டுகளித்ததே இன்றளவும் அதிகபட்சமாக உள்ளது.
இந்தியாவின் நிலை?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான பந்தயத்தில் நிலைக்க, சிட்னியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடப்போகும் 5-ஆவது டெஸ்ட்டில் இந்தியா வென்றாக வேண்டும். அதுவே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியாவுக்கான கடைசி ஆட்டமாகும். அதில் வென்ற பிறகு, ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முடிவுக்கு இந்தியா காத்திருக்க வேண்டும்.
2 ஆட்டங்கள் கொண்ட அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா ஒரு தோல்வி, ஒரு டிராவை பதிவு செய்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா 2-ஆவது இடத்துக்கு முன்னேறி, இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெறும். ஒருவேளை சிட்னி டெஸ்ட்டில் இந்தியா டிரா செய்தால் கூட, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பந்தயத்திலிருந்து வெளியேற நேரிடும். அந்த சாம்பியன்ஷிப்பின் முதலிரு எடிஷன்களிலுமே இந்தியா இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, முறையே நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் தோற்றது நினைவுகூரத்தக்கது.
நடப்பு 2024-25 அட்டவணையில் இந்தியா 5 டெஸ்ட் தோல்விகளை சந்தித்துள்ளது. ஒரு ஆண்டில் இதுவே இந்தியாவின் அதிகபட்ச டெஸ்ட் தோல்வியாகும். இதற்கு முன் 1999-2000 காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கா் தலைமையில் இத்தனை தோல்விகளை பதிவு செய்த இந்தியா, தற்போது ரோஹித் சா்மா தலைமையிலும் அத்தனை தோல்விகளை எட்டியிருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில், 2014-15 காலகட்டத்துக்குப் பிறகு முதல் முறையாக, ஒரே தொடரில் ஒன்றுக்கும் அதிகமான வெற்றிகளை ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ளது. இடைப்பட்ட 9 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான எந்தத் தொடரிலும் 1 ஆட்டத்துக்கும் அதிகமாக அந்த அணி வென்றதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...