பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்
மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்படம் | AP
Published on
Updated on
2 min read

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று (நவம்பர் 4) நடைபெற்றது.

பாகிஸ்தான் - 230/10

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் விளையாடியது. பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 71 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நசீம் ஷா அதிகபட்சமாக 39 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளையும், சீன் அபாட் மற்றும் லபுஷேன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா வெற்றி

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மேத்யூ ஷார்ட் ஒரு ரன்னிலும், ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்லிஷ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தது. ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்களிலும், ஜோஷ் இங்லிஷ் 49 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் களமிறங்கிய மார்னஷ் லபுஷேன் (16 ரன்கள்), ஆரோன் ஹார்டி (10 ரன்கள்), மேக்ஸ்வெல் (0 ரன்), சீன் அபாட் (13 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அணியின் வெற்றிக்கு 30-க்கும் அதிகமான ரன்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில், கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து, சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் இலக்கை எட்டி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரௌஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷகீன் ஷா அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் முகமது ஹாஸ்னைன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com