
இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட 3 மாதங்களுக்குள் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வரலாற்று தொடர் தோல்விகள் அவரது பயிற்சியாளர் பொறுப்பின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: நவம்பர் இறுதியில் ஐபிஎல் மெகா ஏலம்?
சோதனை காலம்
கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி 27 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வியைத் தழுவியது. அதேபோல, டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி சொந்த மண்ணில் கடந்த 12 ஆண்டுகளாக செலுத்தி வந்த ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக இழந்து, மோசமான தோல்வியைத் தழுவியது. இந்திய அணி அதன் கிரிக்கெட் பயணத்தில் இப்படியொரு தோல்வியை ஒருபோதும் சந்தித்ததே இல்லை.
இந்த இரண்டு தொடர் தோல்விகளும் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணியின் மீதான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த சூழலில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட மிக முக்கியமான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின்போது, கௌதம் கம்பீர் எடுத்த சில முடிவுகள் கேள்வியை எழுப்பின. முகமது சிராஜை நைட் வாட்ச்மேனாக களமிறக்க ஒப்புக்கொண்டது மற்றும் முதல் இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் 8-வது வீரராக களமிறக்கப்பட்டது போன்ற அவரது முடிவுகள் சரியானதா என்ற கேள்வியை எழுப்பியது. பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
சுதந்திரமாக செயல்படும் கௌதம் கம்பீர்
இதற்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர்களாக செயல்பட்ட ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் போன்ற யாரும் அணித் தேர்வுக் குழு கூட்டத்தில் அங்கம் வகிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்கையில், தேர்வுக்குழு கூட்டத்தில் அங்கம் வகித்து தனது கருத்துகளை தெரிவிக்க கௌதம் கம்பீர் அனுமதிக்கப் பட்டார்.
இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான தொடர் என்பதால், கௌதம் கம்பீர் இந்திய அணியின் தேர்வுக்குழு கூட்டத்தில் கௌதம் கம்பீர் அனுமதிக்கப்பட்டதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்ஷித் ராணா மற்றும் நிதீஷ் ரெட்டி இருவரும், கௌதம் கம்பீரின் வலியுறுத்தலின் பேரில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இவர்கள் இருவரும் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சோதனையில் வெற்றி பெறுவாரா கௌதம் கம்பீர்?
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தோல்வியின் காரணமாக கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி, போட்டியை அணுகும் விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கௌதம் கம்பீர் மீதான கேள்விகளுக்கும், இந்திய அணியின் மீதான விமர்சனங்களுக்கும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் விடை கிடைத்துவிடும். இந்த தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே, பிசிசிஐ-ன் அடுத்த நகர்வுகள் இருக்கும். இந்திய வீரர்களைக் காட்டிலும் கௌதம் கம்பீர் அணியை வழிநடத்தும் விதத்துக்கு வைக்கப்பட்ட சோதனையாகவே பார்டர் - கவாஸ்கர் தொடர் பார்க்கப்படுகிறது. தனக்கான இந்த சோதனையில் கௌதம் கம்பீர் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.