ஐபிஎல் தொடரில் விளையாட ஜேம்ஸ் ஆண்டர்சன் திடீரென ஆர்வம் காட்ட காரணம் என்ன?

ஐபிஎல் தொடரில் விளையாட திடீரென ஆர்வம் காட்டியதற்கான காரணம் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் (கோப்புப் படம்)
ஜேம்ஸ் ஆண்டர்சன் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் விளையாட திடீரென ஆர்வம் காட்டியதற்கான காரணம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது கிரிக்கெட் பயணத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார். அவரது இந்த சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் இங்கிலாந்து அணிக்காக மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக அவர் செயல்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், 704 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னேவுக்கு அடுத்தபடியாக ஆண்டர்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் மீது ஏன் திடீர் ஆர்வம்?

42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் டி20 போட்டிகளில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு விளையாடியிருந்தார். அதன் பின், அவர் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் பங்கேற்க ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரது பெயரை பதிவு செய்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் அதில் விளையாடாத ஜேம்ஸ் ஆண்டர்சன் திடீரென இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டுவது ஏன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியதாவது: என்னால் இன்னும் விளையாட முடியும் என உறுதியாக நினைக்கிறேன். ஐபிஎல் தொடரில் நான் இதுவரை ஒருபோதும் விளையாடியதில்லை. ஐபிஎல் தொடர் குறித்த அனுபவம் எனக்கு இருந்ததே இல்லை. பல்வேறு காரணங்களின் அடிப்படையில், என்னால் ஒரு வீரராக இன்னும் விளையாட முடியும் என நினைக்கிறேன்.

சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பிறகு, சில காலம் பயிற்சியாளராக செயல்பட்டிருக்கிறேன். இங்கிலாந்து அணியுடன் இணைந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடுவது எனது அனுபவத்தையும், ஆட்டம் குறித்த அறிவையும் மேலும் வளர்க்கும் என நினைக்கிறேன் என்றார்.

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் வருகிற நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com