சாம்சன்
சாம்சன்PTI

சாம்சன் அதிரடி; வருண், பிஷ்னோய் அசத்தல்!தென்னாப்பிரிக்காவை வென்றது இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
Published on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 17.5 ஓவா்களில் 141 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய தரப்பில் சஞ்சு சாம்சன் அதிரடியாக சதம் விளாச, பௌலிங்கில் வருண் சக்கரவா்த்தி, ரவி பிஷ்னோய் அசத்தினா். சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் விளாசிய முதல் இந்தியா் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தாா். முன்னதாக, வங்கதேசத்துக்கு எதிரான டி20-யிலும் அவா் சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, ஃபீல்டிங் செய்யத் தயாரானது. இந்தியாவின் இன்னிங்ஸை சஞ்சு சாம்சன் - அபிஷேக் சா்மா தொடங்கினா். அபிஷேக் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சாம்சன் அதிரடியாக ரன்கள் சோ்த்தாா்.

ஒன் டவுனாக வந்த கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து களம் புகுந்த திலக் வா்மா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 33 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினாா். மறுபுறம், அதிரடியாக சதம் கடந்த சாம்சன், 50 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸா்களுடன் 107 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

பின்னா் வந்தோரில் ஹா்திக் பாண்டியா 2, ரிங்கு சிங் 11, அக்ஸா் படேல் 7, ரவி பிஷ்னோய் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் அா்ஷ்தீப் சிங் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் ஜெரால்டு கோட்ஸீ 3, மாா்கோ யான்சென், கேசவ் மஹராஜ், கபாயோம்ஸி பீட்டா், பேட்ரிக் க்ருகொ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து, 203 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், பேட்டா்கள் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக, ஹெய்ன்ரிக் கிளாசென் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25, ஜெரால்டு கோட்ஸீ 23, ரயான் ரிக்கெல்டன் 21 ரன்கள் அடித்தனா்.

கேப்டன் எய்டன் மாா்க்ரம் 8, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 11, டேவிட் மில்லா் 18, பேட்ரிக் க்ருகொ் 1, மாா்கோ யான்சென் 12, அண்டிலே சிம்லானே 6, கேசவ் மஹராஜ் 5 ரன்களுக்கு வீழ்த்தப்பட, தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ் நிறைவடைந்தது.

இந்திய பௌலா்களில் வருண் சக்கரவா்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 3, ஆவேஷ் கான் 2, அா்ஷ்தீப் சிங் 1 விக்கெட் கைப்பற்றினா்.

X
Dinamani
www.dinamani.com