
நாதன் மெக்ஸ்வீனி டேவிட் வார்னரின் ஆட்டத்தை காப்பியடிக்கத் தேவையில்லை என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் தனது பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்ததுடன், முதல் போட்டியில் உஸ்மான் கவாஜாவுடன் நாதன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனவும் அறிவித்தது.
காப்பியடிக்க தேவையில்லை
பார்டர் - கவாஸ்கர் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக அறிவிக்கப்பட்டுள்ள நாதன் மெக்ஸ்வீனி முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் ஆட்டத்தை காப்பியடிக்கத் தேவையில்லை என உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வீரர்கள் யாரேனும் ஒருவர் வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற கட்டுக்கதை எங்கிருந்து தொடங்கியது என எனத் தெரியவில்லை. ஒரு தொடக்க ஆட்டக்காரராக நீங்கள் ரன்கள் குவிக்க முயற்சி செய்வீர்கள். ரன்கள் குவிப்பதற்கு உங்களுக்கு 5 நாள்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் கூட நாம் ஐந்து நாள்கள் முழுமையாக விளையாடவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு ரன்கள் குவிக்க நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்பதும் முக்கியம்.
இதையும் படிக்க: தோனி, கோலி, ரோகித் மீது சஞ்சு சாம்சன் தந்தை குற்றச்சாட்டு!
டேவிட் வார்னர் மிகவும் சிறப்பான வீரர். அவர் வேகமாக ரன்கள் குவிக்கக் கூடியவர். சில நேரங்களில் அவர் 100 பந்துகளில் 100 ரன்கள் எடுப்பார். ஆனால், ஒவ்வொரு முறையும் அவ்வாறு விளையாட வேண்டும் என நினைக்க மாட்டார். சில நேரங்களில் 100 ரன்கள் குவிக்க அவர் 170 அல்லது 180 பந்துகள் எடுத்துக் கொள்வார். அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். அவர் சிறப்பாக விளையாடுவது, பின்னால் களமிறங்கும் வீரர்களுக்கு அழுத்தமின்றி விளையாட உதவியாக இருக்கும்.
தொடக்க ஆட்டக்காரராக நாதன் மெக்ஸ்வீனி நன்றாக ரன்கள் குவிப்பதாக நினைக்கிறேன். அவரால் வேகமாக ரன்கள் குவிக்க முடியும். அதேநேரத்தில் களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடவும் முடியும். இவை இரண்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானவை. நாதன் மெக்ஸ்வீனி அவற்றை சிறப்பாக செய்கிறார். அவர் அதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அவர் டேவிட் வார்னரைப் போன்று செயல்பட வேண்டும் என நினைக்கத் தேவையில்லை. அவரது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே சிறப்பாக இருக்கும்.
கிரிக்கெட் பயணத்தில் மேடு, பள்ளங்கள் இருக்கும். ஆனால், நாதன் மெக்ஸ்வீனியைப் பாருங்கள். அவர் விளையாடுவதைப் பாருங்கள். அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள முடியும். அவர் சிறப்பாக செயல்படுவார் என எந்த உறுதியும் அளிக்காவிட்டாலும், அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் நன்கு ஆலோசித்தே மெக்ஸ்வீனியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்றார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.