பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸின் பொறுப்பான ஆட்டத்தால் வங்கதேசம் சரிவிலிருந்து மீண்டது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 30) தொடங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் நடைபெறவில்லை.
பாகிஸ்தான் (274/10)
போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (ஆகஸ்ட் 31) டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அப்துல்லா ஷஃபீக் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து, சைம் ஆயுப் மற்றும் கேப்டன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ஷான் மசூத் 57 ரன்களிலும், சைம் ஆயுப் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய பாபர் அசாம் (31 ரன்கள்), சௌத் ஷகீல் (16 ரன்கள்), முகமது ரிஸ்வான் (29 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் களமிறங்கிய அகா சல்மான் 54 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
5 விக்கெட்டுகள்
வங்கதேசம் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹாசன் மிராஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும், நஹித் ராணா மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாம் நாள் முடிவு
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது. ஷாத்மன் இஸ்லாம் 6 ரன்களுடனும், ஜாகீர் ஹாசன் 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
சொதப்பிய முன்வரிசை; காப்பாற்றிய லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன்
பாகிஸ்தானைக் காட்டிலும் 264 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில், வங்கதேசம் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசத்தின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஜாகீர் ஹாசன் (1 ரன்), ஷாத்மன் இஸ்லாம் (10 ரன்கள்), நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (4 ரன்கள்), மோமினுல் (1 ரன்), முஸ்பிக்கூர் ரஹீம் (3 ரன்கள்) மற்றும் ஷகிப் அல் ஹசன் (2 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
வங்கதேசம் 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய இந்த இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹாசன் மிராஸ் 124 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 228 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் இணை 165 ரன்கள் சேர்த்தது. இறுதியில் வங்கதேசம் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
6 விக்கெட்டுகள்
பாகிஸ்தான் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குர்ரம் ஷாஷத் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிர் ஹம்சா மற்றும் அகா சல்மான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதிர்ச்சி தொடக்கம்
வங்கதேசம் 262 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம், பாகிஸ்தான் அணி 12 ரன்கள் முன்னிலை பெற்றது. 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
வங்கதேசத்தைக் காட்டிலும் பாகிஸ்தான் 21 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.