
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 308 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
சொதப்பிய டாப் ஆர்டர்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோஹித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து, ஷுப்மன் கில் 0 ரன்னிலும், விராட் கோலி 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த இணை இந்திய அணியின் ரன்களை சற்று உயர்த்தியது. கார் விபத்துக்குப் பிறகு, டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரிஷப் பந்த் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 118 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். கே.எல்.ராகுல் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அஸ்வின், ஜடேஜா அதிரடி
இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் 6-வது சதம் இதுவாகும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வினின் இரண்டாவது சதம் இதுவாகும்.
மறுமுனையில் தனது பங்குக்கு அதிரடி காட்டிய ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்து அசத்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்திருந்தது . ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன்களுடனும் (10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) , ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடனும் (10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) களத்தில் இருந்தனர்.
இந்தியா 376 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரவீந்திர ஜடேஜா 86 ரன்களில் டஸ்கின் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் 17 ரன்கள் எடுத்தும், ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தும் டஸ்கின் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
5 விக்கெட்டுகள்
வங்கதேசம் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும், நஹித் ராணா மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
149 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம்
இந்திய அணி 376 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, மெஹிதி ஹாசன் மிராஸ் 27 ரன்களும், லிட்டன் தாஸ் 22 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
308 ரன்கள் முன்னிலை
வங்கதேசம் 149 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி வங்கதேசத்தைக் காட்டிலும் 308 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.