

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் ஃபீல்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்த நியூசிலாந்து அணி பிறகு நன்றாக விளையாடியது.
வில் யங், டாம் லாதம் இருவரும் சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். கடைசியில் க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் அரைசதம் கடந்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார். நட்சத்திர வீரர் வில்லியம்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில் யங் 107 ரன்களும், டாம் லேதம் 117* ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, ஹாரிஷ் ரவுஃப் தலா 2 விக்கெட்டுகள், அப்ரார் அஹமது 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக குஷ்தில் ஷா 69 ரன்களிலும், பாபர் அசாம் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஸ்வான் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. நியூசிலாந்து தரப்பில் வில் ஓரூர்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்தத் தொடரில் இந்தியா - வங்கதேசம் விளையாடும் இரண்டாவது போட்டி துபையில் நாளை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.