
ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2023இல் விளையாடிய முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேறினார்.
பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து 14 மாதங்கள் கழித்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். பிஜிடி தொடரில் தேர்வு செய்யவில்லை.
34 வயதாகும் முகமது ஷமி இங்கிலாந்துடனான டி20 தொடரில் கம்பேக் தந்தார். தற்போது பும்ரா இல்லாததால் ஷமி மட்டுமே மூத்த வீரராக இருக்கிறார்.
காயத்திலிருந்து மீண்டு வந்தது குறித்து ஐசிசிக்கு அளித்த பேட்டியில் ஷமி கூறியதாவது:
கடினமான முதலிரண்டு மாதங்கள்
உலகக் கோப்பையில் சிறப்பான ஃபார்மில் இருந்து திடீரென ஆபரேஷன் டேபிளில் இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகவும் கடினமாக இருந்தது.
முதலிரண்டு மாதங்கள் நான் மீண்டும் விளையாடுவேனா என்பதே சந்தேகமாக இருந்தது. பின்னர் 14 மாதங்கள் காலம் கடந்தது என்னை நிலைகுலைய செய்தது.
நான் மருத்துவரிடம் கேட்ட முதல் கேள்வி ‘நான் மீண்டும் களத்துக்குச் செல்ல எத்தனை நாள்கள் ஆகும்’ என்பதுதான்.
களத்தில் எனது காலை வைத்ததுக்கு நான் எப்போதும் ஆச்சரியப்படுகிறேன். தொடர்ச்சியாக களத்தில் ஓடிக்கொண்டிருந்த ஒருவன் திடீரென ஊன்றுகோள் வைத்து இருந்தது கடினமாக இருந்தது.
முதலிரண்டு மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. அந்த நாள்கள் தன்னம்பிக்கையின்மையால் ஊர்ந்து சென்றன. நிறைய விஷயங்கள் எனது மனதில் ஓடின.
நாட்டுக்காக விளையாட வேண்டும்
என்னால் மீண்டும் விளையாட முடியுமா? நொண்டாமல் நடக்க முடியுமா? என பல கேள்விகள் எழுந்தன. 60 நாள்களுக்குப் பிறகு எனது கால்களை தரையில் வைத்தேன். நீங்கள் நம்பமாட்டீர்கள், நான் எப்போதை விடவும் தரையில் கால் வைக்க அதிகமாக அப்போது பயந்தேன்.
எனக்கு குழந்தை முதலில் இருந்து நடப்பது போலிருந்தது. எதாவது நடந்துவிடுமா என மிகவும் பயந்தேன்.
தைரியமும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை மட்டுமே என்னை ஊக்கப்படுத்தியது. எந்தக் கசப்பும் இல்லாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தேன்.
நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது. வலிகள் இருந்தாலும் நான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன். எனது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே ஒரு உத்வேகம். ஒருமுறை விலகிவிட்டால் நீங்கள் யாரோ ஆகிவிடுவீர்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.