ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய ஜாண்டி ரோட்ஸ்!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜாண்டி ரோட்ஸ் பேசியுள்ளார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா
விராட் கோலி, ரோஹித் சர்மாபடம் | AP
Updated on
2 min read

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜாண்டி ரோட்ஸ் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடர் முழுவதுமே இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படத் தவறினர். குறிப்பாக, மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஆதரவு

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்ததற்காக இரண்டு பேரை மட்டும் கடுமையாக விமர்சிப்பது நியாயமில்லை என அவர்களுக்கு ஆதரவாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் பேசியுள்ளார்.

ஜாண்டி ரோட்ஸ் (கோப்புப் படம்)
ஜாண்டி ரோட்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அனைவருக்கும் அவர்களது கருத்துகளை கூறுவதற்கு உரிமை இருக்கிறது. இந்த நவீன காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்களின் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான வீரர்களை கொண்டாடுவதாக இருக்கட்டும் அல்லது சரியாக விளையாடாத வீரர்களை விமர்சிப்பதாக இருக்கட்டும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ரசிகர்கள் அவர்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். அனைவரும் கிரிக்கெட்டில் அனுபவசாலிகள் போன்று தெரிகிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது மிகவும் கடினம். இந்திய அணி கடந்த இரண்டு சுற்றுப்பயணங்களின் போதும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியதை இந்திய ரசிகர்கள் மறந்துவிட்டதாக நினைக்கிறேன். இந்த முறை இந்திய அணியால் தொடரை வெல்ல முடியவில்லை. அதற்காக வெறும் இரண்டு பேரை (ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி) மட்டும் கடுமையாக விமர்சிப்பது எப்படி சரியாகும். தொடரை இழந்ததற்கு இரண்டு பேர் மீது மட்டுமே பழி சுமத்தப்படுகிறது என்றார்.

முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com