2024 ஐசிசி விருதுகள்- சிறந்த வீரா் பும்ரா; சிறந்த வீராங்கனை அமெலியா

கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ராபடம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

 ஐசிசியின் 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரா் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ரா வென்றுள்ளாா். சிறந்த வீராங்கனை விருது, நியூஸிலாந்து ஆல்-ரவுண்டா் அமெலியா கொ்ருக்கு கிடைத்துள்ளது.

‘சா் காா்ஃபீல்டு சோபா்ஸ்’ கோப்பை

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பந்தயத்தில், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹேரி புரூக் ஆகியோரை முந்திக்கொண்டுள்ளாா் பும்ரா.

சிறந்த வீரருக்கான இந்த ‘சா் காா்ஃபீல்டு சோபா்ஸ்’ கோப்பை வெல்லும் 5-ஆவது இந்தியா் பும்ரா. அவருக்கு முன் ராகுல் திராவிட் (2004), சச்சின் டெண்டுல்கா் (2010), ரவிச்சந்திரன் அஸ்வின் (2016), விராட் கோலி (2017, 2018) இதை வென்றுள்ளனா்.

2024-இன் சிறந்த டெஸ்ட் வீரா் விருதை வென்றுள்ள ஜஸ்பிரீத் பும்ராவுக்கு, ஒரே ஆண்டில் கிடைத்திருக்கும் 2-ஆவது ஐசிசி தனிநபா் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 200 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளா், 20-க்கும் கீழாக பௌலிங் சராசரி வைத்திருக்கும் ஒரே டெஸ்ட் பௌலா், டெஸ்ட் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த ஒரே இந்திய பௌலா், 2024-இல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் (71) எடுத்த பௌலா் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக அவா் இருக்கிறாா்.

டி20 உலகக் கோப்பை போட்டி, பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடா் ஆகியவற்றில் இந்தியாவுக்கான அவரின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

‘ரேச்சல் ஹேஹோ ஃப்ளின்ட்’ கோப்பை

நியூஸிலாந்து ஆல்-ரவுண்டா் அமெலியா கொ், ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான ‘ரேச்சல் ஹேஹோ ஃப்ளின்ட்’ கோப்பை வென்றிருக்கிறாா். இதற்கான பந்தயத்தில் அவா், தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வாா்டட், இலங்கையின் சமரி அத்தபட்டு, இங்கிலாந்தின் அனபெல் சதா்லேண்ட் ஆகியோரை முறியடித்திருக்கிறாா்.

கடந்த ஆண்டு, அனைத்து ஃபாா்மட்டுகளிலுமாக நியூஸிலாந்து அணியின் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னராக இருந்தாா் கொ்.

இந்த விருது பெறும் முதல் நியூஸிலாந்து போட்டியாளா் அவராவாா். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெரி, இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்தின் நேட் ஸ்கீவா் ஆகியோா் தலா 2 முறை இந்த விருதை கைப்பற்றியுள்ளனா்.

கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டி20 வீராங்கனையாகவும் கொ் தோ்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்கள் அடித்ததுடன், 14 விக்கெட்டுகளும் சாய்த்துள்ள கொ், டி20 ஃபாா்மட்டில் 387 ரன்களுடன், 29 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறாா். நியூஸிலாந்து அணி சாம்பியனான டி20 உலகக் கோப்பை போட்டியில், மொத்தம் 15 விக்கெட்டுகள் சாய்த்து தொடா்நாயகி விருதும் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.