வாழ்வா? சாவா? போட்டிக்கான மும்பை அணி அறிவிப்பு; ரோஹித் சர்மா அணியில் இல்லை!

ரஞ்சி கோப்பை தொடரில் அடுத்து விளையாடவுள்ள மிக முக்கியமான போட்டிக்கான மும்பை அணி இன்று (ஜனவரி 28) அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா (கோப்புப் படம்)
ரோஹித் சர்மா (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ரஞ்சி கோப்பை தொடரில் அடுத்து விளையாடவுள்ள மிக முக்கியமான போட்டிக்கான மும்பை அணி இன்று (ஜனவரி 28) அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் முக்கியமான போட்டியில் மேகாலயாவை எதிர்த்து நடப்பு சாம்பியனான மும்பை அணி விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 30) மும்பையில் தொடங்கவுள்ளது.

ரோஹித் சர்மா அணியில் இல்லை

சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள மேகாலயாவுக்கு எதிராக மிகவும் முக்கியமான போட்டியில் விளையாடவுள்ள நிலையில், அப்போட்டிக்கான மும்பை அணி இன்று (ஜனவரி 28) அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறவில்லை. அங்க்ரிஷ் ரகுவன்ஷி, சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் அதர்வா அங்கோல்கர் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வருகிற பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதால், மும்பை அணியில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் மூவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான கடந்த போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்ததால், மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணி உள்ளது. புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய வெற்றியை போனஸ் புள்ளிகளுடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மும்பை உள்ளது. அதேவேளையில், ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் பரோடா அணி, அதன் அடுத்த போட்டியில் ஜம்மு - காஷ்மீரிடம் தோல்வியடைய வேண்டும்.

மேகாலயாவுக்கு எதிரான போட்டிக்கான மும்பை அணி விவரம்

அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கால், சித்தேஷ் லாட், ஆகாஷ் ஆனந்த், ஹார்திக் தமோர், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஷர்துல் தாக்குர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், மோஹித் அவஸ்தி, சில்வஸ்டர் டிசௌசா, ராய்ஸ்டன் டையஸ், ஸ்ரேயாஸ் கௌரவ் மற்றும் அதர்வா அங்கோல்கர்.

ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் மும்பை அணியில் இடம்பெற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.