
டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்வது இன்று மிகவும் எளிதாகிவிட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜூலை 26) இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 600 ரன்களைக் கடந்து வலுவாக உள்ளது. இந்திய அணியைக் காட்டிலும் இங்கிலாந்து அணி 240 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதம் விளாசி அசத்தினார். அவர் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையையும் அவர் முறியடித்தார்.
கெவின் பீட்டர்சன் கூறுவதென்ன?
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்திருக்கும் நிலையில், டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சு தரம் குறைந்துவிட்டதாகவும், 20-25 ஆண்டுகளுக்கு முன்பைக் காட்டிலும் தற்போது பேட்டிங் செய்வது மிகவும் எளிதாகவிட்டதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கெவின் பீட்டர்சன் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 20-25 ஆண்டுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்வது இன்று மிகவு எளிதாகிவிட்டது எனக் கூறுவதால், என்னிடம் கோபம் கொள்ளாதீர்கள். அப்போதெல்லாம், பேட்டிங் செய்வது இன்றைவிட இரண்டு மடங்கு மிகவும் கடினமாக இருந்தது எனப் பதிவிட்டுள்ளார்.
கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட், 136 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் 2005-லிருந்து 2013 ஆம் ஆண்டு இடைவெளியில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் 8,181 ரன்கள் குவித்துள்ளார். அதில் 23 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும்.
கடந்த காலங்களில் பந்துவீச்சு தரமானதாக இருந்ததற்கு எடுத்துக்காட்டாக 22 பந்துவீச்சாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு இணையாக தற்போது உள்ள பந்துவீச்சாளர்கள் 10 பேரின் பெயரைக் குறிப்பிட முடியுமா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மான்செஸ்டர் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் எடுத்ததன் மூலம், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த ஜோ ரூட், அடுத்து சச்சினின் சாதனையை முறியடிப்பதை நோக்கி நகர்ந்து வருகிறார்.
15,921 ரன்களுடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.