
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கேரளத்தை வீழ்த்தி விதர்பா சாம்பியன் பட்டம் வென்றது.
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேரளம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, விதர்பா முதல் இன்னிங்ஸில் 379 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் டேனிஷ் மேல்வர் அதிகபட்சமாக 153 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து, கருண் நாயர் 86 ரன்கள் எடுத்தார். கேரளம் தரப்பில் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் சாதனை!
37 ரன்கள் முன்னிலை
விதர்பா 379 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேரளம் அதன் முதல் இன்னிங்ஸில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் சச்சின் பேபி அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சர்வாட் 79 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே, ஹர்ஷ் துபே மற்றும் பார்த் ரேகாட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் விதர்பா கேரளத்தைக் காட்டிலும் 37 ரன்கள் முன்னிலை பெற்றது.
விதர்பா சாம்பியன்
37 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 375 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கருண் நாயர் அதிகபட்சமாக 135 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, டேனிஷ் மேல்வர் 73 ரன்களும், தர்ஷன் நல்கண்டே 51 ரன்களும் எடுத்தனர்.
கடைசி நாள் முழுவதும் விதர்பா அணி விளையாடியதால், கேரளத்துக்கு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் போட்டி டிரா ஆனது. பின்னர், முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையின் அடிப்படையில் விதர்பா அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விதர்பா அணி 3-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது.
இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய டேனிஷ் மேல்வருக்கு ஆட்ட நாயகன் விருதும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஹர்ஷ் துபேவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.