
பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் ஐபிஎல் 2026 தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். அப்படி விளையாடினால் ஆர்சிபி அணிக்காக விளையாடுவேன் எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக விராட் கோலி முகமது ஆமிரை உலகத் தரமான பந்துவீச்சாளர் எனப் புகழ்ந்து பேசினார். தற்போது விராட் கோலியுடன் இணைந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
32 வயதாகும் இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஆமிர் டிச.2024 உடன் தனது ஓய்வை இரண்டாவது முறையாக அறிவித்தார். டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக அந்த முடிவினை எடுத்திருந்தார்.
எப்படி சாத்தியம்?
ஐபிஎல் 2008இல் மட்டுமே பாகிஸ்தான் வீரர்கள் விளையாட அனிமதிக்கப்பட்டது. அதற்கு பிறகு அரசியல் காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டது.
2009 டி20 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியில் ஆமிர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் 271 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள ஆமிர் பிரிட்டன் குடியுரிமையை பெறவிருக்கிறார். அதனால், வெளிநாட்டு வீரர் என்ற முறையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பிருக்கிறது.
அடுத்தாண்டு ஏலத்தில் முகமது ஆமிர் பங்கேற்றால் அவரை எந்த அணி வேண்டுமானாலும் ஏலத்தில் எடுக்கலாம்.
விராட் கோலி மிகவும் சிறந்தவர்
இது குறித்து அவர் பேசியதாவது:
அடுத்தாண்டு எனக்கு ஐபிஎல் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஆர்சிபி எனக்கு மிகவும் பிடித்த அணி.
விராட் சிறந்த வீரர். திறமையை மதிப்பவர். அவர் எனக்கு பேட்டினை பரிசளித்துள்ளார். அவரது செயலைப் பார்த்து நான் நெகிழ்ச்சி அடைந்துள்ளேன். அவர அளித்த பேட்டில் சில நல்ல இன்னிங்ஸை விளையாடியுள்ளேன். நான் அவரது பேட்டிங்கை ரசித்து பார்த்திருக்கிறேன். என்னுடைய பந்துவீச்சை அவரும் ரசித்துள்ளார் என்றார்.