

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான போட்டிகளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் திடல் உள்பட இந்தியாவில் உள்ள 5 திடல்களில் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படக்கூடிய ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தானுக்கான போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஊடகங்கள் தெரிவித்த தகவலின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சமீபத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரைப் போன்று பல்வேறு நகரங்களில் நடத்தாமல் முக்கியமாக சில இடங்களில் மட்டும் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படவுள்ள ஒவ்வொரு திடல்களிலும் குறைந்தபட்சம் ஆறு போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் போட்டிகளை நடத்துவதற்காக அகமதாபாத், தில்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது.
இறுதிப்போட்டியை நடத்த அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் திடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு மற்றும் லக்னௌவில் போட்டிகள் நடத்தப்படுமா? என்பது குறித்து நிச்சயமற்றத் தன்மையே நிலவிவருகிறது. அதேவேளை இலங்கையில் மூன்று கிரிக்கெட் திடல்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், திடல்களின் விவரங்கள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
அதேபோன்று, மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்ட குவாஹாட்டி, விசாகப்பட்டினம், இந்தூர், நவிமும்பை உள்ளிட்ட இடங்களில் போட்டிகளை நடத்த பிசிசிஐ பரிசீலிக்காது என்றும் கூறப்படுகிறது.
இலங்கை அரையிறுதிக்குத் தகுதிபெற்றால், அந்தப் போட்டி கொழும்புவிலும், பாகிஸ்தான் அணி ஒருவேளை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றால் இலங்கையில் எந்த திடலில் போட்டியை நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை அடுத்தாண்டு துவக்கத்தில் நடத்தப்படும் நிலையில், போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐசிசியிடம் சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.