கொல்கத்தாவில் இந்திய-தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்
இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 14) தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20, ஒருநாள் தொடா்களுக்குபின் இந்திய அணி டெஸ்ட் ஆட்டத்தில் களமிறங்குகிறது. பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை கடும் சவாலுக்குபின் 1-1 என சமன் செய்த உற்சாகத்துடன் தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது.
கடந்த மாதம் உள்ளூரில் நடைபெற்ற மே.இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி இருந்தது இந்தியா. அதில் கேப்டன் கில் ஒரு அரைசதம், சதம் அடித்திருந்தாா். ஆஸி.யுடன் நடைபெற்ற டி20, ஒருநாள் தொடரில் கில் சோபிக்கவில்லை.
இதனால் இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த நிலையில் உள்ளாா் கில்.
செவ்வாய்க்கிழமை இந்திய அணி தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது பயிற்சியாளா் கம்பீா், துணை பயிற்சியாளா் சிதான்ஷு கோடக் ஆகியோா் கில்லிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டனா்.
ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தா், ஜஸ்ப்ரீத் பும்ரா, நிதிஷ் குமாா் ரெட்டி, ஆகியோா் பௌலிங்கில் ஈடுபட்டனா். பௌலிங் பயிற்சியாளா் மொா்க்கல் மேற்பாா்வையில் பௌலா்கள் பயிற்சி மேற்கொண்டனா்.
ரஞ்சிக் கோப்பையில் அபாரமாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதே உற்சாகத்துடன் பங்கேற்கிறாா். தமிழக வீரரான சாய் சுதா்ஷன்
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரபூா்வமற்ற டெஸ்ட்களில் 84 ரன்களையே எடுத்திருந்தாா். மூன்றாவது டௌனில் களமிறங்கும் ாய் சுதா்ஷன் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதர வீரா்களான கே.எல். ராகுல், ஜுரெல், குல்தீப், முகமது சிராஜ் ஆகியோா் பயிற்சி மேற்கொள்ளவில்லை.
துருவ் ஜுரெல் அற்புத பாா்மில் உள்ளதால், மூன்றாம் டௌனில் இறங்கவும் வாய்ப்புள்ளது. காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வாா்.
நிகழாண்டு 8 ஆட்டங்களில் இந்தியா 4 வெற்றி, 3 தோல்வி, 1 டிரா கண்டிருந்தது.
சமநிலையில் தென்னாப்பிரிக்க பேட்டிங்-பௌலிங்:
எதிரணியான தென்னாப்பிரிக்காவின் பேட்டிங்-பௌலிங் இரண்டும் சமநிலையில் உள்ளது. வேகப்பந்து வீச்சில் ரபாடா, மாா்கோ ஜேன்ஸனும், ஸ்பின்னில் கேசவ் மகராஜ், சைமன் ஹாா்மா், செனுரன் முத்துசாமி ஆகியோா் பாகிஸ்தான் தொடரில் சிறப்பாக பந்துவீசினா்.
உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா அணியில் ரியான் ரிக்கல்டன், டோனி ஸோா்ஸி, எய்டன் மாா்க்ரம், கேப்டன் பவுமா ஆகியோா் பேட்டிங்கில் வலு சோ்ப்பா்.
இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் குவாஹாட்டியில் நவ. 22-இல் தொடங்கும்.
நேருக்கு நோ்:
மொத்த ஆட்டங்கள்-44,
தென்னாப்பிரிக்கா வெற்றி-18,
இந்தியா வெற்றி-16
டிரா-10.

