

ஆஷஸ் தொடருக்கான பந்துவீச்சு பயிற்சியில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் ஈடுபட்டுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், ஜோஷ் ஹேசில்வுட்டும் முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் பிரதான பந்துவீச்சாளர்கள் இரண்டு பேர் இல்லாமல் களமிறங்குகிறது. அணியை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.
இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மார்க் வுட் காயம் காரணமாக, ஆஷஸ் தொடரின் பிரதான போட்டிகளுக்கு முன்பாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. இந்த நிலையில், அவர் மீண்டும் பந்துவீச்சு பயிற்சிக்கு திரும்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
பெர்த்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 35 வயதாகும் மார்க் வுட், கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார்.
மார்க் வுட் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது குறித்து ஜேமி ஸ்மித் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: பேட்டிங் பயிற்சியின்போது, மார்க் வுட் பந்துவீச்சை எதிர்கொண்டேன். அவர் மிகவும் வேகமாக பந்துவீசுகிறார். ஆஷஸ் தொடருக்காக அவர் சிறப்பாக தயாராகி வருகிறார். அவர் முழு உடல்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், இங்கிலாந்து அணி ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் என இரண்டு முக்கியமான வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்றார்.
இதையும் படிக்க: 3-வது முறையாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.