

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியில் இரு பூர்வக்குடி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் நாளை காலை பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் திடலில் தொடங்கவுள்ளது.
நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட்டில் கொடிகட்டி பறக்கும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுவதால், இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் ஆஷஸ் தொடரை காண ஆவலாகவுள்ளனர்.
இந்தத் தொடரில், பிரதான கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகினார். இதனால், அவருக்குப் பதிலாக பொறுப்பு கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் விலகியதால், அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளார் பிரண்டன் டாக்கெட்டுக்கு முதல்முறையாக அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரை மேலும் சிறப்பிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் பூர்வகுடியைச் சேர்ந்த பிரண்டன் டாக்கெட் மற்றும் வேகப்பந்து வீச்சில் எதிரணி வீரர்களை அசரவைக்கக்கூடியவரான ஸ்காட் போலண்ட் இருவருக்கும், ஆஸ்திரேலிய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், வரலாற்றில் முதல்முறையாக இரண்டு ஆஸ்திரேலிய பூர்வகுடியைச் சேர்ந்த வீரர்கள் கிரிக்கெட்டில் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற ஐந்தாவது பூர்வகுடி வீரர் என்ற சிறப்பையும் டாக்கெட் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, ஃபெய்த் தாமஸ், ஜேசன் கில்லெஸ்ப்பி, ஆஷ் கார்னெர் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
நியூ சௌத் வேல்ஸின் வோரிமி பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான டாக்கெட், முதல்தரப் போட்டிகளில் 190 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டாக்கெட் அறிமுகம் குறித்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், “அவர் மிகவும் திறமையான வீரர். கடந்த சில வருடங்களாகவே அவர் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளார். அவரின் ஆட்டத்தைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.