7 விக்கெட்டுகள் வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் மிரட்டல்.! 172 ரன்களில் சரணடைந்த இங்கிலாந்து!
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் 172 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் இன்று (நவ.21) காலை பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் திடலில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து
தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் களம் புகுந்தனர்.
வழக்கம்போலவே, ஆஷஸ் தொடர் என்றாலே அசுர வேகத்தில் பந்து வீசக்கூடிய மிட்செல் ஸ்டார்க்கின் இந்தத் தொடரில் முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லியைத் திணறிடித்தார்.
முதல் 5 பந்துகளை எதிர்கொண்ட ஜாக் கிராவ்லி, முதல் ஓவரின் கடைசிப் பந்தை அடிக்க முயன்று ஸ்லிப்பின் நின்ற கவாஜாவிடம் சிக்கினார். இதனால், ரன் ஏதுமின்றி அவர் வெளியேறினார்.
முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்ததையடுத்து பென் டக்கெட் மற்றும் ஆலி போப் இருவரும் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும், இவர்களையும் தனது வேகத்தால் ஸ்டார்க் திணறடித்தார்.
மிட்செல் மிரட்டல்
2-வது விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்த நிலையில், பென் ட்க்கெட், ஸ்டார்க்கிடம் எல்பிடபிள்யூ முறையில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து ரசிகர்களின் ஆரவாரத்துடன் நுழைந்த நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 7 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதுமின்றி ஸ்டார்க்கின் பந்துவீச்சில் லாபுஷேனிடம் சிக்கினார்.
பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்த ஹாரி ப்ரூக், 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்து அறிமுக வீரர் டாக்கெட்டின் பந்து வீச்சில் அலெக்ஸ் கேரியிடன் கேட்ச்சாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ஆலி போப் 46 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களிலும் ஸ்டார்க்கிடமே சிக்கினர்.
விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 6 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து அவரும் ஸ்டார்க்கிடம் வீழ்ந்தார். அதன்பின்னர், கஸ் அகிட்சன் 1 ரன்னிலும், கார்ஸ் 6 ரன்களிலும், மார்க் வுட் ரன் ஏதுமின்றியும் வீழ்ந்தனர்.
இங்கிலாந்து அணி 32.5 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 172 ரன்களில் சுருண்டது.
ஆஸ்திரேலிய அணித் தரப்பில் 12. 5 ஓவர்கள் பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க், 4 மெய்டன்களுடன் 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். அவரைத் தவிர்த்து, பிரெண்டன் டாக்கெட் 2 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Ashes 2025-26: Mitchell Starc picks career-best figures in first Australia vs England Test
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

