

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. குவாஹாட்டியில் இன்று (அக்டோபர் 29) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் விளையாடியது.
சதம் விளாசிய லாரா வோல்வர்ட்
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் லாரா வோல்வர்ட் சதம் விளாசி அசத்தினார். அவர் 143 பந்துகளில் 169 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 20 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். 169 ரன்கள் எடுத்ததன் மூலம், உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிகபட்ச ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை லாரா வோல்வர்ட் படைத்தார்.
அவரைத் தொடர்ந்து, தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களும், மாரிஸன் காப் 42 ரன்களும் எடுத்தனர். சோல் டிரையான் 33 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லாரன் பெல் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா
320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 42.3 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு (ஒருநாள் மற்றும் டி20 வடிவிலான தொடர் இரண்டையும் சேர்த்து) முன்னேறியுள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்டர்களான எமி ஜோன்ஸ், டம்மி பீமௌண்ட் மற்றும் ஹீதர் நைட் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 64 ரன்களும், அலைஸ் கேப்சி 50 ரன்களும் எடுத்தனர். டேனியல்லே வியாட் ஹாட்ஜ் 34 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் மாரிஸேன் காப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நடின் டி கிளர்க் 2 விக்கெட்டுகளையும், அயபோங்கா, நான்குலுலேகோ மிலாபா மற்றும் சூன் லூஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அதிரடியாக விளையாடி சதம் விளாசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வருகிற நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, இந்தியா அல்லது ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.