
இந்திய அணியிடம் ஆசிய கோப்பை வழங்கப்படாததற்கு பிசிசிஐ தரப்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் துபையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது. பின்னர், பேட்டிங் செய்த இந்திய அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி வெற்றி பெற்றதும் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு ரன்னர்-அப் 2-வது பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர். இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு எடுத்துச் சென்றது.
இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியிடம் கோப்பையை இன்னும் வழங்காமல் இருப்பதற்காக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை பிசிசிஐ வன்மையாக கண்டித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியிடம் ஆசிய கோப்பையை இன்னும் வழங்காமல் இருப்பது தொடர்பாக ஆசிய கவுன்சிலில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா தரப்பில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மோஷின் நக்வியின் செயலுக்கு வலுவான எதிர்ப்பு எழுந்தது. வெற்றி பெற்ற அணியிடம் கோப்பை வழங்கப்பட வேண்டும். இது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் கோப்பை எனவும், தனிநபருக்கு சொந்தமான கோப்பை இல்லை எனவும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்திய அணியிடம் கோப்பையை வழங்க ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மோஷின் நக்வி மறுப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: நியூசி.க்கு எதிரான டி20 தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.