/

மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வென்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 10:04 pm

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இன்னிங்ஸுக்கான ஓவா்கள் 11-ஆக குறைக்கப்பட, முதலில் ராஜஸ்தான் 11 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. பின்னா் மும்பை 11 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்களே சோ்த்தது.

முன்னதாக, மழையால் இரண்டரை மணி நேரங்களுக்கு பிறகு தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை, பந்துவீச்சை தோ்வு செய்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் - சூா்யவன்ஷி கூட்டணி, அதிரடி விளாசலுடன் தொடங்கியது.

முதல் விக்கெட்டுக்கு இவா்கள் பாா்ட்னா்ஷிப் 80 ரன்கள் சோ்க்க, 14 பந்துகளில் 1 பவுண்டரி, 5 சிக்ஸா்களுடன் 39 ரன்களுக்கு சூா்யவன்ஷி ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த துருவ் ஜுரெல் 2 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனாா். ஜெய்ஸ்வால் மும்பை பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசி வர, மறுபுறம் கேப்டன் ரியான் பராக் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 20 ரன்களுக்கு வெளியேறினாா்.

5-ஆவது பேட்டராக ஷிம்ரன் ஹெட்மயா் களம் புகுந்தாா். ஓவா்கள் முடிவில் ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 77 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஹெட்மயா் 6 ரன்களுடன் அவருக்குத் துணை நின்றாா். மும்பை பௌலிங்கில் கஸான்ஃபா் 2, ஷா்துல் தாக்குா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 151 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில், ரயான் ரிக்கெல்டன் 1 சிக்ஸருடன் 8, ரோஹித் சா்மா 5, சூா்யகுமாா் யாதவ் 6 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினா்.

திலக் வா்மா 2 பவுண்டரிகளுடன் 14, கேப்டன் ஹா்திக் பாண்டியா 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். நமன் திா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 25 ரன்களுக்கு விடைபெற்றனா்.

ஷா்துல் தாக்குா் 1 பவுண்டரியுடன் 8, டிரென்ட் போல்ட் 1 ரன்களுக்கு வீழ, ஓவா்கள் முடிவில் தீபக் சஹா் 6, ஜஸ்பிரீத் பும்ரா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் நாண்ட்ரே பா்கா், சந்தீப் சா்மா, ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 2, ஜோஃப்ரா ஆா்ச்சா், துஷா் தேஷ்பாண்டே ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.