
இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த இந்திய வீரர் கரண் சர்மாவைப் பற்றி....
கரண் சர்மா
இந்திய அணி வீரர் கரண் சர்மா தனது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத், பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தவர் கரண் சர்மா. 38 வயதான இவர், அதிர்ஷ்டக்காரர் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அழைக்கப்படுகிறார். இவர் விளையாடிய அணிகளில் சென்னை, மும்பை, ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் கோப்பையை உச்சிமுகர்ந்திருக்கின்றன.
நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த கரண் சர்மா, இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அவர் கடைசியாக 2014 ஆம் ஆண்டு நவம்பரில் விளையாடியிருந்தார்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற உ.பி. டி20 லீக் தொடரில் கான்பூர் சூப்பர்ஸ்டார்ஸ் மற்றும் மீரட் மேவரிக்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார் கரண் சர்மா. மேலும், அவர் ஆக. 25 ஆம் தேதி லக்னௌவில் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் விளையாடுகிறார்.
2007-2008 ஆம் ஆண்டு முதல் தர, லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். ஆரம்பத்தில் அவர் ஒரு ஆல்-ரவுண்டராக இருந்த இவர், ரஞ்சி டிராபி அறிமுகப் போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார்.
இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் தொடருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரோஹித் சர்மா 264 ரன்கள் அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் அறிமுகமானார். அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியிருந்த கரண் சர்மா, விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
2016-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2017-ல் மும்பை இந்தியன்ஸ், 2018-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் என தொடர்ச்சியாக கோப்பைகளை வென்ற அணிகளில் இடம்பெற்றிருந்தார்.
97 முதல் தரப் போட்டிகளில் 270 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டு சதங்கள் மற்றும் 17 அரைசதங்களுடன் 2,866 ரன்கள் எடுத்துள்ளார். 90 ஐபிஎல் போட்டிகளில் 83 விக்கெட்டுகள் உள்பட 191 போட்டிகளில் 168 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதுகுறித்து கரண் சர்மா பேசுகையில், “நான் இப்போது ஓய்வு பெற விரும்புகிறேன். இந்த கிரிக்கெட் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவளித்த எனது குடும்பத்தினர், பிசிசிஐ, ரயில்வே, யுபிசிஏ, ஆந்திரா, விதர்பா கிரிக்கெட் சங்கத்தினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கான நேரம் வந்துவிட்டது. எனக்கு ஏற்கனவே 38 வயதாகிவிட்டது. இனி விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன். நான் எவ்வளவு போட்டிகளில் விளையாடுகிறேனோ, அதே நேரத்தில் இளம் வீரரின் இடத்தைப் பிடித்துவிடுவேன்.
இந்திய அணியிலிருந்து அழைப்பு ஒருபோதும் வராது; அதனால், தொடர்ந்து விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால் நான் என் குடும்பத்தினர், நண்பர்களிடம் பேசினேன். அவர்களும் இதுதான் சரியான நேரம் என்று தெரிவித்தனர்” என்றார்.
Summary
India leg-spinner Karn Sharma has announced his retirement from international and domestic cricket at 38, bringing the curtain down on a career that included four international appearances and three IPL titles with three different teams.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






