

இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புதன்கிழமை (ஜன. 14) நடைபெறுகிறது.
மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
இந்திய அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய விராட் கோலியுடன், கேப்டன் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் இந்த ஆட்டத்திலும் அணியின் ஸ்கோருக்கு பலம் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அந்த ஆட்டத்தில் விரைவாகவே வெளியேறிய தொடக்க வீரரான ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் நிலைத்து நின்று ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கலாம். பெüலிங்கில் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் நியூஸிலாந்து பேட்டர்களுக்கு சவால் அளிக்கக் காத்திருக்கின்றனர்.
காயம் காரணமாக வெளியேறிய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டாலும், பிளேயிங் லெவனில் நிதீஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.
நியூஸிலாந்து அணியை பொருத்தவரை, டெவன் கான்வே, ஹென்றி நிகோலஸ், டேரில் மிட்செல் ஆகியோர் அந்த அணியின் ஸ்கோரை அபாரமாக உயர்த்த உதவினர். 2-ஆவது ஆட்டத்திலும் அவர்கள் அதே உத்வேகத்துடன் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஆட்டத்தில் சோபிக்காமல் போன வில் யங், கிளென் ஃபிலிப்ஸ் உள்ளிட்டோரும் இதில் முனைப்புடன் செயல்படக் காத்திருக்கின்றனர். பெளலிங்கில் கைல் ஜேமிசன் முதல் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் சாய்த்து இந்திய பேட்டர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.
அவருக்கு இதர பெளலர்களும் இந்த ஆட்டத்தில் தோள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
உத்தேச லெவன்
இந்தியா
ரோஹித் சர்மா, ஷுப்மன் கில்
(கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, நிதீஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
நியூஸிலாந்து
டெவன் கான்வே (வி.கீ.), ஹென்றி நிகோலஸ், வில் யங், டேரில் மிட்செல், கிளென் ஃபிலிப்ஸ், மிட்செல் ஹே, மைக்கேல் ரே, மைக்கேல் பிரேஸ்வெல், ஜாக் ஃபோக்ஸ், கைல்
ஜேமிசன், ஆதித்யா அசோக்.
நேரம்: நண்பகல் 1.30 மணி நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.