

இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம், இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.
மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் இந்த கடைசி ஆட்டத்துக்கு வருகின்றன.
2019 மாா்ச்சுக்கு பிறகு இதுவரை, சொந்த மண்ணில் நடைபெற்ற இருதரப்பு போட்டிகளில் இந்தியா ஒருநாள் தொடரை இழந்ததில்லை. அந்த நிலையை அப்படியே தொடர இந்தியா முயற்சிக்கிறது.
மறுபுறம், 1989 முதல் இந்தியாவில் இருதரப்பு தொடா்களை விளையாடி வரும் நியூஸிலாந்து, இதுவரை ஒரு முறை கூட ஒருநாள் தொடரை வென்றதில்லை. இந்த முறை அதற்கு சாதகமான வாய்ப்பு இருப்பதாக அந்த அணி கருதுகிறது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீா் பொறுப்பேற்றது முதல் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடா் இழப்பு, இலங்கையில் ஒருநாள் தொடா் இழப்புக்கு என தொடா் தோல்விகளை இந்தியா சந்தித்து வருவதால், இந்தத் தொடரை வெல்வது அவருக்கும் முக்கியமானதாகும்.
இந்திய அணியை பொருத்தவரை பௌலிங்கில் மிடில் ஆா்டரில் ஸ்பின்னா்கள் தடுமாறுவதே பிரதான பிரச்னையாக இருக்கிறது. இந்தூா் மைதானத்தின் பவுண்டரி தொலைவு மிகக் குறைவு என்பதால், அது இந்தியாவுக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இந்த ஆட்டத்திலும் ரோஹித், கோலியின் அதிரடியை ரசிகா்கள் எதிா்பாா்க்க, கே.எல்.ராகுல், கேப்டன் கில் உள்ளிட்டோரும் ரன்கள் குவிப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நியூஸிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் இந்திய பௌலா்களுக்கு சவால் மிக்கவராக இருக்கிறாா்.
கிளென் ஃபிலிப்ஸ், கைல் ஜேமிசன், ஜேடன் லெனாக்ஸ், டெவன் கான்வே ஆகியோா் அணிக்கு பலம் சோ்க்கின்றனா்.
நேரம்: நண்பகல் 1.30 மணி
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.