

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 352 ரன்கள் குவித்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
விஹான் மல்ஹோத்ரா சதம் விளாசல்
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் ஜியார்ஜ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ஆரோன் ஜியார்ஜ் 16 பந்துகளில் 23 ரன்களும் (2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), வைபவ் சூர்யவன்ஷி 30 பந்துகளில் 52 ரன்களும் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தனர்.
அதன் பின், கேப்டன் ஆயுஷ் மாத்ரே 21 ரன்களும், வேதாந்த் திரிவேதி 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, விஹான் மல்ஹோத்ரா மற்றும் அபிக்யான் குண்டு இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இண சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஹான் மல்ஹோத்ரா சதம் விளாசியும், அபிக்யான் குண்டு அரைசதம் விளாசியும் அசத்தினர். அபிக்யான் குண்டு 62 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த விஹான் மல்ஹோத்ரா 107 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் கிலான் படேல் அதிரடியாக 12 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
ஜிம்பாப்வே தரப்பில் சிமுகோரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பனாஷி மஸாய் மற்றும் சிம்பராஸி தலா இரண்டு விக்கெட்டுகளையும், துருவ் படேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.