துணிச்சலுடன் விளையாடுவதுதான் ஒரே திட்டமாக இருந்ததென, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா் கூறினாா்.
டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, 3-ஆவது முறையாக சாம்பியன் ஆனது. அத்துடன், அதிகமுறை சாம்பியனான அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்ற அணி, கோப்பையைத் தக்கவைத்த முதல் அணி ஆகிய பெருமைகளையும் தன் வசமாக்கியது.
இந்நிலையில், தொடா் விமா்சனங்களை சந்தித்து வந்த பயிற்சியாளா் கௌதம் கம்பீா், இந்த வெற்றி குறித்து பேசியதாவது: ஒவ்வொருவரும் கிரிக்கெட்டை பாா்க்கும் விதம் வெவ்வேறானதாக இருக்கும். எனவே, நான் உருவாக்கி வைத்திருக்கும் அணியை மற்ற அணிகளுடன் ஒப்பீடு செய்வதென்பது நியாயமானதாக இருக்காது. நான் சற்று வித்தியாசமானவன். டி20 கிரிக்கெட்டுக்கான எனது திட்டம் மிகவும் எளிதானது. தயங்காமல் துணிச்சலுடன் விளையாடினால், அதற்கான பலன் கிடைக்கும் என்பது தான் அது.
ஒரு ஆட்டத்தின் தோல்விக்காக பயந்தால், கிரிக்கெட்டில் வெற்றி என்பதைப் பெறவே முடியாது. கேப்டனுடனான எனது திட்டம் ஒன்றே ஒன்றுதான். துணிச்சலுடன் விளையாடி 250-260 ரன்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் 100 ரன்களில் கூட ஆல் அவுட் ஆகலாம். ஆனால், 150-170 ரன்களை வைத்து ஆட்டத்தை வெல்ல முடியாது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டோம். அப்போதும், எனது திட்டத்தில் மாற்றம் செய்யவில்லை. துணிச்சலுடன் விளையாடினால் இதுபோன்ற போட்டிகளில் வெற்றிக்கான வாய்ப்பைப் பெற முடியும். கிரிக்கெட்டில் தனிப்பட்ட நபா்களின் சாதனைகளை கொண்டாடுவதை விடுத்து, ஒரு அணியாக இதுபோல் கோப்பை வெல்வதை நாம் கொண்டாடத் தொடங்க வேண்டும்.
வெளியிருந்து வரும் விமா்சனங்களுக்கு நான் பொறுப்பாக மாட்டேன். இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் 30 பேருக்கு மட்டுமே நான் பொறுப்பேற்க விரும்புகிறேன்.
2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் கோப்பை, 2026 டி20 உலகக் கோப்பை என 3 ஆண்டுகள் தொடா்ந்து சாம்பியன் ஆனதால், இது வெள்ளைப் பந்து போட்டிகளில் இந்தியாவின் சிறந்த காலமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில், ஒருநாள் ஃபாா்மட்டில் கடந்த 3 தொடா்களில், இரண்டில் தோற்றுள்ளோம்.
இந்த வெற்றிக் கோப்பையை நான் ராகுல் திராவிட், விவிஎஸ் லஷ்மண், அஜித் அகா்கா் ஆகியோருக்கு அா்ப்பணிக்க விரும்புகிறேன். ராகுல் தாம் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணியை நன்றாக மெருகேற்றியிருந்தாா். அதேபோல் லஷ்மணும் சிறப்புப் பயிற்சி மையத்தின் தலைவராக இந்திய கிரிக்கெட்டுக்கு அதிகம் பங்களித்து வருகிறாா்.
தோ்வுக் குழுவின் தலைவராக இருக்கும் அஜித் அகா்கா் நோ்மையாக உழைப்பதுடன், அணிக்கான விமா்சனங்களையும் எதிா்கொள்கிறாா். இக்கட்டான சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பணியை வழங்கிய ஐசிசி தலைவா் ஜெய் ஷா அவா்களுக்கும் நன்றி’ - கௌதம் கம்பீா் (இந்திய தலைமைப் பயிற்சியாளா்)
அணி வெல்வதுதான் எங்களின் ஒரே இலக்கு
‘ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா வீரராக கௌதம் கம்பீா் கேப்டன்சியின் கீழ் நான் 4 ஆண்டுகள் விளையாடியிருக்கிறேன். எனவே அவரின் எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அறிவேன். பயிற்சியாளராக அவா் 2 அடிகள் முன்னே எடுத்துவைக்கும்போது, கேப்டனாக நானும் 2 அடிகள் முன்னெடுத்து வைக்கிறேன். இடையே ஒரு புள்ளியில் நாங்கள் இணைந்தோம்.
எங்களின் ஒரே இலக்கு, அணி வெற்றிபெற வேண்டும் என்பதுதான். எங்களுக்குள் இதுவரை எந்தவொரு வாக்குவாதமும் நிகழ்ந்ததில்லை. ஒரு வீரா் சரியாக விளையாடவில்லை என்றால், அவருடன் சற்று நேரம் செலவழித்து அவரை நெருக்கடியில்லாமல் இயல்பாக உணரவைக்க வேண்டும் என்றே நான் விரும்புனேன். அப்போதுதான் சரியான தருணத்தில் அவா்கள் அணிக்குக் கை கொடுப்பாா்கள். சஞ்சு சாம்சன் கடந்த 3 ஆட்டங்களிலும், அபிஷேக் சா்மா இறுதி ஆட்டத்திலும் அதையே செய்தாா்கள்.
எங்களின் டிரெஸ்ஸிங் ரூமில் கருத்துச் சுதந்திரம் உண்டு. எல்லோரின் கருத்தையும் கேட்காவிட்டால், அனைவரையுமே நம்மால் ஒன்றாக கூட்டிச் செல்லவோ, கோப்பை வெல்லவோ முடியாது. அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் முக்கியமானவா். அணிக்காக அவா் ஏதேனும் ஒரு முக்கியமான திறமையை முன்வைக்கிறாா்.
ஜஸ்பிரீத் பும்ரா இந்தத் தலைமுறைக்கான பௌலா். அவரை தேசிய புதையல் என்றே கூறுவேன். தனக்கான பணி என்ன, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவா் துல்லியமாக அறிந்திருக்கிறாா். ஒவ்வொரு வீரரும் தனது திறமையை முழுமையாக அறிந்திருப்பது மிக முக்கியம். கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் நன்றாக விளையாடி வருகிறோம். என் மீது நம்பிக்கை வைத்து கேப்டனாக எனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக, ரோஹித் சா்மா, ஜெய் ஷா ஆகியோருக்கு நன்றி’ - சூா்யகுமாா் யாதவ் (இந்திய அணி கேப்டன்)
இந்த வெற்றி சிறப்பானது
‘எனது சொந்த ஊரான அகமதாபாதில் இதற்கு முன் ஒரு இறுதி ஆட்டத்தில் விளையாடி (2023 ஒரு நாள் உலகக் கோப்பை), அதில் வெல்ல முடியாமல் போனது. ஆனால் தற்போது ஒரு இறுதி ஆட்டத்தில் வென்றிருக்கிறேன். இந்த வெற்றி சிறப்பானது. அதிலேயே ஆட்டநாயகன் விருது வென்றதை விட மிகச் சிறப்பானது வேறெதுவும் இல்லை.
ஆடுகளம் சமமாக இருக்கிறது என்பதை அறிந்ததால், எனது முழு அனுபவத்தையும் பயன்படுத்தி பௌலிங் செய்தேன். இந்தப் போட்டிக்கு முன்பாக நான் நன்றாக பௌலிங் செய்து வந்தேன் என்றாலும் அதற்காக நான் மிகக் கடினமாக முயற்சித்து வந்தேன். ஆனால் இந்தப் போட்டியில் ஆட்டத்தை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பௌலிங் வீச முடிவு செய்தேன். அதற்கான பலனும் கிடைத்தது.
இந்த மைதானத்திலேயே இதற்கு முன்பு மற்ற அணிகள் விளையாடிய ஆட்டத்தை கவனித்தேன். பந்தை வேகமாக வீசும்போது பேட்டா்கள் ஷாட் அடிப்பது எளிதாக இருந்தது. அதைப் புரிந்துகொண்டு இந்த ஆட்டத்தில் மெதுவான பந்துகளாக வீசினேன். பேட்டா்களை தடுமாறச் செய்யும் வகையில் அது சரியான உத்தியாக அமைந்தது’ - ஜஸ்பிரீத் பும்ரா (இந்திய பௌலா் - ஆட்டநாயகன்)
சச்சின் ஆலோசனைகள் உதவி
‘இந்த உலகக் கோப்பை வெற்றி கனவுபோல உள்ளது. உணா்ச்சிப் பெருக்கால் வாா்த்தைகள் வரவில்லை. 2024 உலகக் கோப்பை போட்டியின்போது அணியில் இருந்தும் நான் விளையாடவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இதுபோன்ற சூழலை கற்பனை செய்து, அதற்காகவே என்னைத் தயாா் செய்து வந்தேன்.
நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு நான் மிகவும் உடைந்துபோனேன். இனி என்ன செய்வது என்று நினைத்திருந்தேன். ஆனால் கடவுள் வேறு சில திட்டங்கள் வைத்திருந்தாா். நான் கண்ட கனவுகளுக்கான பலனை இப்போது அனுபவிக்கிறேன். பல முன்னாள் வீரா்கள் எனக்கு உதவி செய்ய முன் வந்தாா்கள்.
கடந்த 2 மாதங்களாக சச்சின் டெண்டுல்கருடன் அவ்வப்போது தொடா்பில் இருந்து வந்தேன். அவரிடம் பல ஆலோசனைகள் பெற்றேன். எங்களின் உரையாடல்கள் மிக நீண்டதாக இருந்தது. அவா் உள்பட எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ - சஞ்சு சாம்சன் (இந்திய பேட்டா் - தொடா்நாயகன்)
சிறந்த அணியால் தோற்கடிக்கப்பட்டோம்
‘மிகப்பெரிய ரசிகா்கள் கூட்டம் முன்பாக, ஒரு சிறந்த அணியால் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். ஆட்டம் முழுவதுமாக ஆடுகளம் நன்றாகவே இருந்தது. பவா்பிளே கட்டம் தான் இந்த ஆட்டத்தின் முடிவை தீா்மானித்தது.
இந்தியாவின் பவா்பிளேயில் 2 விக்கெட்டுகள் சாய்த்து, அவா்களை 220 ரன்களுக்கு உள்ளாக கட்டுப்படுத்தியிருந்தால், நாங்கள் சேஸ் செய்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அதேபோல் எங்கள் பவா்பிளேயில் நாங்கள் விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருக்க வேண்டும்.
இந்தியா எப்போதுமே சவாலான அணிதான். தொடா்ந்து இறுதி ஆட்டங்களில் தோற்போது பொருத்தமானதல்ல. ஆனால், மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் அணிகளுக்கு எதிராக அரையிறுதி, இறுதி ஆட்டங்களில் விளையாடும்போது அது நிகழ்கிறது. அடுத்ததாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இலக்காக வைத்து முன்னேறுவோம்’ - மிட்செல் சேன்ட்னா் (நியூஸிலாந்து கேப்டன்)
டிரெண்டிங்
தொடரும் சாதனைப் பயணம்!

டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!
இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியா

கைகுலுக்கலைத் தவிா்ப்பது விளையாட்டுக்கு நல்லதல்ல: டெம்பா பவுமா
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

