உலகக் கோப்பை கால்பந்து 2018


குரூப் சி
பிரான்ஸ்
ஆஸ்திரேலியா
பெரு
டென்மார்க்
முக்கிய வீரர்கள், நிலவரம்
குரூப் சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.
பிரான்ஸ்
ஐரோப்பாவில் கால்பந்து ஜாம்பவான் அணிகளில் ஒன்றாக விளங்கும் பிரான்ஸ் அணி கடந்த 1998-இல் பாரிஸில் நடந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஆனால் தொடர்ந்து குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக 2006 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இத்தாலியிடம் பெனால்டி முறையில் தோல்வியடைந்தது. 2014 போட்டியில் காலிறுதியோடு வெளியேறியது. 2016-ல் சொந்த மண்ணிலேயே நடந்த யூரோ சாம்பியன் போட்டியில் போர்ச்சுகலிடம் வீழ்ந்தது. தற்போது அந்த அணி திறமையான இளம் வீரர்களை கொண்டுள்ளது. இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகும் முயற்சியில் உள்ள பிரான்ஸ் தாக்குதல், பந்தை கடத்துதல் போன்றவற்றில் பின்தங்கி உள்ளது.
நட்சத்திர வீரர் ரஃபேல் வரேன் இவர் அணியின் தற்காப்பு ஆட்டத்துக்கு முக்கியமானவராக விளங்குகிறார். எதிரணி வீரர்களை சமாளிப்பதில் ரஃபேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பயிற்சியாளர் டியர் டெஸ்சாம்ப்ஸ்
1998 உலகக் கோப்பை, 2000 யூரோ போட்டியில் பிரான்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து பட்டம் வெல்ல உதவிய டெஸ்சாம்ப்ஸ் தற்போது அணியை வலுமிக்கதாக மாற்றி உள்ளார். உலகக் கோப்பை 2018 அரையிறுதி வரை முன்னேறுவதை குறைந்தபட்ச நோக்கமாக அவர் கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியா
தொடர்ந்து 4-வது முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது. ஆனால் சவுதி அரேபியாவின் கோல் சராசரியை விட சற்று குறைவானதால் ஆசியாவில் இருந்து நேரடித் தகுதி பெற முடியாமல் ஆஸி. அணி மொத்தம் 22 தகுதி ஆட்டங்களில் விளையாடி சிரியா, ஹோண்டுராஸ் அணிகளை வென்ற பின் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
கடந்த 2014 போட்டியில் இடம் பெற்ற அதே இளம் வீரர்கள் தற்போதும் உள்ளனர். முதன்முறையாக 2015-இல் ஆசிய கோப்பை பட்டத்தை ஆஸி வென்றது. தற்போது தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்து வரும் இந்த அணியின் பயிற்சியாளர் அன்கே போஸ்டேக்லு பதவியை ராஜிநாமா செய்து விட்டார். இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டியுள்ளது.
நட்சத்திர வீரர் மைல் ஜெடிநாக் நடுக்கள ஆட்டக்காரரான ஜெடிநாக் ஹோண்டுராஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்து வெற்றிக்கு உதவினார். காயத்துக்கு பின் மீண்டும் இணைந்துள்ள அவரது ஆட்டத்தை ஆஸி அணி நம்பியுள்ளது.
பெரு
தென் அமெரிக்க நாடுகளில் கால்பந்தில் வலுவான பிரேசில், ஆர்ஜென்டீனா, உருகுவே, கொலம்பியா, சிலி, உள்ளிட்ட அணிகளுக்கு பின் பேசப்படும் அணிகளில் பெருவும் ஒன்றாகும்.
உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் போட்டியில் சிலி, பராகுவே, ஈக்குவடார் போன்றவை இருந்தாலும், பெரு தகுதி ஆட்டங்களில் வென்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
பெரு அணியின் பெரும்பாலான வீரர்கள், மெக்ஸிகோ நாட்டு கிளப் அணிகளில் விளையாடி வருகின்றனர். பெட்ரோ கால்சே, லூயிஸ் அட்வின்சுலா, பெட்ரோ அக்கியுனோ, ரவுல் ருடியாஸ்,
ஆன்டி போலோ அவர்களில் முக்கியமானவர்கள்.
நட்சத்திர வீரர் பாவ்லோ கியுரோ 33 வயதான கேப்டன் பாவ்லோ கியுரோ தகுதி ஆட்டங்களில் 6 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். எனினும் பிஃபாவின் ஊக்க மருந்து புகார் தடையால் அவர் விளையாடுவது மிகுந்த கேள்விக்குறியாக இருந்தது. மேலும் சுவிட்சர்லாந்து உச்சநீதிமன்றத்திலும் கியுரோ மேல்முறையீடு செய்த நிலையில் அவர் மீதான தடை நீக்கப்பட்டதால், மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட உள்ளார்.
பயிற்சியாளர் ரிக்கார்டோ கார்சியா
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ரிக்கார்டோ 2015-இல் இருந்து பெரு அணிக்கு பயிற்சி அளித்து வரும் அவர் சிறப்பான ஆட்டத்திறன் கொண்டதாக மாற்றி உள்ளார்.
டென்மார்க்
ஐரோப்பாவின் வலுவான கால்பந்து அணிகளில் ஒன்றாக மிக வேகமாக
டென்மார்க் வளர்ந்து வருகிறது. கடந்த 2012 யூரோ போட்டிகளுக்கு பின் பெரிய போட்டியில் ஆடாத அந்த அணி, கடந்த 2016 நடந்த தகுதி ஆட்டங்களில் 2 தோல்விகளை சந்தித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து 11 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியது. போலந்தை 4-0 எனவும், அயர்லாந்தை 5-1 எனவும் வென்றது.
நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்:
வெறும் 18 வயதில் 2010 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய எரிக்சன் தற்போது சிறந்த பார்மில் உள்ளார். டென்மார்க் அணியின் வெவ்வேறு ஆட்டங்களில் 11 கோல்களை அடித்து வெற்றிக்கு உதவியுள்ளார். ரஷியாவில் எரிக்சன் ஆட்டமே அணியின் வெற்றிப் பாதையை முடிவுசெய்யும்.
பயிற்சியாளர் ஏஜ் ஹரைட்
நார்வே நாட்டைச் சேர்ந்த ஹரைட் டென்மார்க் அணியை சிறப்பான அணியாக உருவாக்கி உள்ளார். தனது நாட்டு அணிக்கும் 5 ஆண்டுகள் பயிற்சி அளித்துள்ளார்.
டாப் 10 நட்சத்திர வீரர்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்)
கடந்த 10 ஆண்டுகளாக உலக கால்பந்து அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கிளப் அணிகளுக்கான அனைத்து பட்டங்களையும் அவர் பெற்று விட்டார்.
கடந்த 2016-இல் இவரது சிறப்பான ஆட்டத்தால், தனது நாடான போர்ச்சுகலை முதன்முறையாக ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோவும் இடம் பெற்றார்.உலகக் கோப்பை போட்டி தகுதி பெற்ற போர்ச்சுகல், தற்போது சாம்பியன் பட்டத்தை வெல்வதை நோக்கமாக கொண்டுள்ளது. நான்கு முறை தங்க காலணி விருது வென்றுள்ளார்.
1978 சாம்பியன் ஆர்ஜென்டீனா

தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில் முதன்முறையாக 11-ஆவது உலகக் கோப்பை போட்டிகள் கடந்த 1978 ஜூன் 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றன. 6 நகரங்களில் நடந்த இப்போட்டியில் 16 அணிகள் இடம் பெற்றன. போட்டியை நடத்தும் நிலையில் ஆர்ஜென்டீனாவும், நடப்புச் சாம்பியன் நிலையில் மேற்கு ஜெர்மனியும் நேரடித் தகுதி பெற்றன.
4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டி பல்வேறு புகார்களுக்கு உள்ளானது. ஆர்ஜென்டீனா அணி தான் வெற்றி பெறுவதற்கு சாதகமாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்ப்பட்டது.
மேலும் அப்போதைய சர்வாதிகார அரசு தலையிட்டு, ஆர்ஜென்டீனாவுக்கு சாதகமாக பெரு அணியை வற்புறுத்தியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் இறுதிச் சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணி 2-1 என்ற கோல்கணக்கில் நெதர்லாந்தை வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மரியோ கெம்பஸ் சிறப்பாக ஆடி வெற்றிக்கு வித்திட்டார்.
மொத்த ஆட்டங்கள்-38.
கோல்கள்: 102.
பார்வையாளர்: 15,45, 791.
அதிக கோலடித்தவர்; மரியோ கெம்பஸ் (ஆர்ஜென்டீனா)-6.
நட்பு ஆட்டங்கள் சிலியிடம் 1-0 என செர்பியா தோல்வி

உலகக் கோப்பை 2018 போட்டியை முன்னிட்டு நடைபெற்ற நட்பு ஆட்டம் ஒன்றில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.
கிராஸ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வென்றது.
பிரேசில், கோஸ்டா ரிகா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அணிகள் பிரிவில் இடம் பெற்றுள்ள செர்பியாவும், தென் அமெரிக்க சாம்பியனுமான சிலியும் மோதின. இதில் செர்பிய வீரர்கள் சரிவர ஆடாத நிலையில் தோல்வியைத் தழுவினர்.
குரூப் பி பிரிவில் இடம் ஈரான், போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட அணிகளுடன் இடம் பெற்றுள்ள மொராக்கோவும்-ஸ்லோவோக்கியாகவும் ஜெனிவா நகரில் நடந்த நட்பு ஆட்டம் ஒன்றில் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...