ஆறு கோப்பைகள்: ஐபிஎல் போட்டியின் மகத்தான வீரர் - ரோஹித் சர்மா!
2011-ல் மும்பை அணி, 2 மில்லியன் டாலருக்கு ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்தது.


கேப்டனாக ஐந்தாவது முறையும் வீரராக ஆறாவது முறையும் ஐபிஎல் கோப்பையை வென்று மகத்தான ஐபிஎல் வீரராகப் பெயர் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
முன்னதாக முதலில் பேட் செய்த தில்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. டிரென்ட் போல்ட் 4 ஓவா்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னா் ஆடிய மும்பை 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இதன் மூலம் ஒரு கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.
2008 ஏலத்தில் 750,000 டாலருக்கு ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்தது டெக்கான் சார்ஜர்ஸ். மூன்று வருடங்களும் நன்றாக விளையாடினார். 2008-ல் 13 ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 404 ரன்களும் 2009-ல் ஒரு அரை சதத்துடன் 383 ரன்களும் 2010-ல் 16 ஆட்டங்களில் 3 அரை சதங்களுடன் 404 ரன்களும் எடுத்து இதர அணிகளின் கவனத்தை ஈர்த்தார். 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றது.
2011-ல் மும்பை அணி, 2 மில்லியன் டாலருக்கு ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி, ரோஹித் சர்மாவைத் தக்கவைக்காமல் ஏலத்தில் தேர்வு செய்ய முடிவெடுத்தது. ஆனால், ஏலத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியே வென்றது.
ஐபிஎல் போட்டி ஆரம்பித்த முதல் ஐந்து வருடங்களில் ஒரு கோப்பையையும் மும்பை அணி வெல்லவில்லை. அதாவது 2008 முதல் 2012 வரை. ஆனால் 2013-ல் மும்பை அணியின் கேப்டன் ஆனார் ரோஹித் சர்மா. அதில் ஆரம்பித்து இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றுவிட்டது. அதற்கான முக்கியக் காரணம் ரோஹித் சர்மா எனச் சொல்லவும் வேண்டுமா?
ரோஹித் சர்மா இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் இறுதிச்சுற்றில் தோற்றதில்லை. ஆறு ஐபிஎல் இறுதிச்சுற்றுகளில் விளையாடி ஆறிலும் அவருக்கு வெற்றிகள் கிடைத்துள்ளன. 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். பிறகு மும்பை அணிக்குத் தலைமை தாங்கி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்.
ஒரு வீரராக ஆறு முறையும் ஒரு கேப்டனாக ஐந்து முறையும் ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார் ரோஹித் சர்மா. இதனால் ஐபிஎல் போட்டியின் மகத்தான வீரர் என்கிற பெருமை ரோஹித் சர்மாவை விடவும் வேறு யாருக்குப் பொருத்தமாக இருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...