ரஸல் 5 விக்கெட்டுகள்: 152 ரன்களுக்கு மும்பை ஆட்டமிழப்பு
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தார்.
பவர் பிளே:
மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். டி காக் 2-வது ஓவரிலேயே வருண் சக்ரவர்த்தி சுழலில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரோஹித்துடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார்.
ஆடுகளத் தன்மையை அறிந்த மார்கன் பவர் பிளேவின் முதல் 5 ஓவர்களுக்கு சுழற்பந்துவீச்சாளர்களையே பயன்படுத்தினார். ஹர்பஜன் வீசிய 3-வது ஓவரில் மட்டும் சூர்யகுமார் 3 பவுண்டரிகள் அடித்ததால் ரன் ரேட் சற்று உயர்ந்தது.
பவர் பிளே முடிவில் மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்தது.
ரோஹித் - சூர்யகுமார் இணை:
பவர் பிளேவுக்குப் பிறகு சூர்யகுமார் சற்று அதிரடி காட்டி இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். இதனால் ரன் ரேட் ஓவருக்கு 8-ஐத் தாண்டியது.
பேட் கம்மின்ஸ் பந்தில் சிக்ஸர் அடித்த சூர்யகுமார் 33-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.
ஆனால், அரைசதம் அடித்த கையோடு அடுத்த ஓவரிலேயே ஷகிப் அல் ஹசனிடம் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்த இணை 2-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தது.
அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால், ரன் ரேட்டில் சரிவு ஏற்பட்டது. இதுவரை தாக்குப்பிடித்து விளையாடிய ரோஹித் கடைசி வரை விளையாடி பெரிய இன்னிங்ஸாக மாற்றத் தவறினார். கம்மின்ஸ் பந்தில் 43 ரன்களுக்கு போல்டானார்.
11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்:
பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரில் ஹார்திக் பாண்டியா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆண்ட்ரே ரஸல் வீசிய அடுத்த ஓவரில் கைரன் பொலார்ட் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்கோ ஜேன்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்தது மும்பை.
ஆனால் கிருனாள் பாண்டியாவால் 19-வது ஓவரில் 2 பவுண்டரிகள் (லெக் பைஸ் உள்பட), கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் 2 பவுண்டரிகள் கிடைத்ததால் மும்பை அணி 150 ரன்களை எட்டியது. அவரும் கடைசி ஓவரின் 3-வது பந்தில் ரஸலிடம் 15 ரன்களுக்கு வீழ்ந்தார். ரஸல் மேலும் அடுத்த பந்தில் ஜாஸ்பிரீத் பூம்ராவையும், கடைசி பந்தில் ராகுல் சஹாரையம் வீழ்த்தினார்.
இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 5 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிரசித், ஷகிப், வருண் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...