தொடர்ந்து மோசமாக விளையாடும் சுரேஷ் ரெய்னா: பயிற்சியாளர் பிளெமிங் என்ன சொல்கிறார்?

எல்லோருமே சிறப்பாகப் பங்களித்து வருகிறார்கள். ஒருவரைத் தவிர...
தொடர்ந்து மோசமாக விளையாடும் சுரேஷ் ரெய்னா: பயிற்சியாளர் பிளெமிங் என்ன சொல்கிறார்?

சிஎஸ்கே அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டது. பேட்டிங், பந்துவீச்சு என யாருமே குறை வைக்கவில்லை. எல்லோருமே சிறப்பாகப் பங்களித்து வருகிறார்கள். ஒருவரைத் தவிர.

சுரேஷ் ரெய்னா இந்த வருடம் மோசமாக விளையாடி வருவது சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 4-வது நிலை வீரராகக் களமிறங்கும் ரெய்னா ஓர் ஆட்டத்தில் மட்டுமே இந்த வருடம் நன்கு விளையாடினார். ஆரம்பத்தில் தில்லி அணிக்கு எதிராக 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் ரெய்னா. அதன்பிறகு அவருடைய பேட்டிங் மெச்சிக்கொள்ளும்படி இல்லை. 9 இன்னிங்ஸில் ஒருமுறை மட்டுமே 20 ரன்களைக் கடந்தார். இதனால் அடுத்த ஆட்டங்களில் ரெய்னாவை அணியிலிருந்து நீக்கி ராபின் உத்தப்பா அல்லது புஜாராவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் ரெய்னாவின் ஆட்டம் பற்றி சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் கூறியதாவது:

ரெய்னாவுக்கான பொறுப்பு என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துள்ளோம். அவருக்கான சரியான வேளையில் அவர் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். களத்தில் நுழைந்தவுடன் அதிரடியாக விளையாடும் வீரரை நாங்கள் பெற்றுள்ளோம். எனவே அவரை சுற்றி பேட்டர்களை அனுப்புகிறோம். ரெய்னாவின் அனுபவத்தை மதிக்கிறோம். நடு ஓவர்களில் அவர் விளையாடினால் எங்கள் அணிக்குப் பலமாக இருக்கும். அனுபவ வீரர் என்பதால் அவருக்குச் சில சுதந்திரம் உள்ளது. போட்டி இன்னும் தொடர்ந்து நடைபெறும்போது அவருடைய ஆட்டத்திறன் அதிகமாகும் என்று கூறியுள்ளார்.

பிளெமிங் கூறியபடி இனிவரும் ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணியில் ரெய்னா தொடர்ந்து விளையாடுவார் என்று அறியப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com