தரக்குறைவாகப் பேசுவதா?: மார்கன் - செளதி மீது அஸ்வின் சாடல்

இதைப் பற்றி மக்கள் விவாதித்து யார் நல்லவர், யார் கெட்டவர் என முடிவெடுப்பது...
தரக்குறைவாகப் பேசுவதா?: மார்கன் - செளதி மீது அஸ்வின் சாடல்

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மார்கன் - செளதியுடன் நடைபெற்ற வாக்குவாதம் தொடர்பாக அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.

கொல்கத்தா - தில்லி இடையிலான ஆட்டத்தில் அஸ்வினுடன் செளதி, மார்கன் ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்தது ஐபிஎல் 2021 போட்டியில் புதிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தில்லியை கேகேஆர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின்போதுதான் கொல்கத்தா வீரர்களுக்கும் அஸ்வினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுக் கடைசியில் தினேஷ் கார்த்திக் தலையிட்டுச் சமாதானப்படுத்தினார். 

தில்லி இன்னிங்ஸின் கடைசி ஓவரில் செளதி பந்தில் ஆட்டமிழந்தார் அஸ்வின். அப்போது அஸ்வினிடம் வாக்குவாதம் செய்தார் செளதி. அதற்குக் கோபத்துடன் பதில் அளித்தார் அஸ்வின். பிறகு அஸ்வினிடம் கேகேஆர் கேப்டன் மார்கனும் வாக்குவாதம் செய்ய அஸ்வின் இன்னும் கோபத்துடன் அவரிடம் பேசினார். இதைப் பார்த்த தினேஷ் கார்த்திக், ஓடிச் சென்று அஸ்வினைச் சமாதானப்படுத்தி அனுப்பினார். சக தமிழ்நாட்டு வீரர் டிகேவின் சொல்லுக்கு மதிப்பளித்து அஸ்வினும் பிறகு ஓய்வறைக்குத் திரும்பிச் சென்றார். கொல்கத்தா அணி விளையாடியபோது மார்கனின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அப்போது மிகவும் ஆக்ரோஷமாக அந்த வெற்றியைக் கொண்டாடினார் அஸ்வின். 

கொல்கத்தா அணியினர் அஸ்வின் மீது கோபத்தை வெளிப்படுத்தியதற்குக் காரணம், 19-வது ஓவரில் ரன் எடுக்க முயன்றபோது திரிபாதி த்ரோ வீசினார். அந்தப் பந்து ரிஷப் பந்தின் பேட்டில் பட்டு வேறு திசைக்குச் சென்றது. உடனே இன்னொரு ரன் ஓடலாம் என ரிஷப் பந்தை அஸ்வின் அழைத்தார். இதில் கடுப்பான கொல்கத்தா வீரர்கள், அஸ்வின் ஆட்டமிழந்த பிறகு கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

விதிமுறைப்படி ஸ்டம்ப், பேட்டர், பேட் மீது த்ரோ வீசப்பட்ட பந்து மோதி அதே இடத்தில் இல்லாமல் வேறு திசைக்குச் சென்றால் அதைக் கொண்டு பேட்டர்கள் ரன்கள் எடுக்கலாம். எனினும் சில வீரர்கள் இதில் ரன் எடுக்கக்கூடாது என எண்ணி ஓடாமலும் இருப்பார்கள். 

இதிலுள்ள விநோதம், 2019 ஒருநாள் உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு இதேபோன்றதொரு சம்பவம் காரணமாக அமைந்தது.  உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் வீசிய த்ரோ, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரியாக மாறியது. இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல இச்சம்பவம் முக்கியக் காரணமாக அமைந்ததால் அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்த மார்கன், தற்போது அஸ்வினின் செயலுக்குக் கோபமடைவது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான தன்னுடைய விளக்கத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அஸ்வின். அவர் கூறியதாவது:

ஃபீல்டர் த்ரோ வீசியவுடனே நான் ரன் எடுக்கத் தயாராகிவிட்டேன். அந்தப் பந்து ரிஷப் பந்தின் மீது பட்டது பற்றி எனக்குத் தெரியாது. ஒருவேளை நான் அதைப் பார்த்திருந்தால் ஓடியிருப்பேனா? கண்டிப்பாக. அதற்கு எனக்கு அனுமதி உண்டு. மார்கன் என்னைப் பற்றி கேவலம் எனச் சொன்னது போல நடந்துகொள்பவனா? கண்டிப்பாக இல்லை. நான் சண்டை போட்டேனா? இல்லை. நான் எனக்காகத் துணை நின்றேன். அதைத்தான் என்னுடைய ஆசிரியர்களும் பெற்றோரும் கற்றுத் தந்தார்கள். உங்களுடைய கருத்துகளில் எப்போதும் உறுதியாக இருங்கள் என உங்கள் குழந்தைகளுக்குத் தயவுசெய்து கற்றுக்கொடுங்கள். 

மார்கன், செளதியின் கிரிக்கெட் உலகில் எது சரி, எது தவறு என அவர்கள் நம்புகிறார்களோ அதில் உறுதியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நினைப்பதுதான் அறம் சார்ந்தது என எண்ணுவதற்கு உரிமை கிடையாது. அதேபோல தரக்குறைவான வார்த்தைகளைப் பேசக்கூடாது. இதைப் பற்றி மக்கள் விவாதித்து யார் நல்லவர், யார் கெட்டவர் என முடிவெடுப்பது இன்னும் ஆச்சர்யமளிக்கிறது. 

கிரிக்கெட் என்பது ஜெண்டில்மேன் விளையாட்டு என எண்ணும் ரசிகர்களுக்கு - பல்வேறு சிந்தனைகளுடன் பல லட்சம் கிரிக்கெட் வீரர்கள் இந்த விளையாட்டைத் தொழிலாக எண்ணுகிறார்கள். மோசமான த்ரோவால் எடுக்கப்படும் கூடுதல் ரன் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கலாம், மறுமுனையில் (பந்துவீசும் முன்பு) கிரீஸை விட்டு வெளியேறும் வீரரால் உங்கள் வாழ்க்கை தகர்க்கப்படலாம். நீங்கள் ரன் ஓட மறுத்தாலோ மறுமுனையில் உள்ள பேட்டரை எச்சரித்தாலோ நல்ல மனிதனாகப் பார்க்கப்படுவீர்கள் எனக் குழப்ப வேண்டாம். உங்களை நல்லவராகவோ கெட்டவராகவோ மதிக்கும் நபர்கள் எல்லோரும் ஏற்கெனவே தங்களுக்காக வாழ்க்கையை நிர்ணயித்திருப்பார்கள். உங்கள் முழு மனத்தையும் செலுத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுங்கள், ஆட்டம் முடிந்தவுடன் கைக்குலுக்குங்கள். அதுதான் விளையாட்டை உண்மையாக விளையாடுவது என நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com